ஆயுஷ்
20,000-க்கும் அதிகமான பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில் ஆயுர்வேத அடிப்படையிலான சுகாதார பரிசோதனை மற்றும் நோய் மேலாண்மைக்கான தேசிய அளவிலான திட்டம் நாளை தொடங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
20 FEB 2024 5:04PM by PIB Chennai
20,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில் ஆயுர்வேத நடைமுறைகள் மூலம் சுகாதார பரிசோதனை மற்றும் நோய் மேலாண்மைக்கான தேசிய அளவிலான திட்டத்தை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் நாளை (21.02.2024) புதுதில்லியில் தொடங்கி வைக்கின்றனர். ஆயுஷ் அமைச்சகம் தனது ஆராய்ச்சி கவுன்சில் மூலம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பொதுவான சுகாதார நிலையை பரிசோதிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் (EMRS) இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரத்த சோகை, ஹீமோகுளோபின் தொடர்பான குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காசநோய் ஆகியவை தொடர்பான பரிசோதனைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஆயுர்வேதத்தின் கொள்கைகளின்படி மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நோய்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாக்கப்படும்.
பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் இடையே 2022 அக்டோபரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 20 மாநிலங்களில் 72 ஊட்டச்சத்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் பழங்குடி மக்கள் தொகை 10.43 கோடியாகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6% ஆகும். இவர்களில் 89.97% பேர் கிராமப்புறங்களிலும், 10.03% பேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் பழங்குடியினர் ஆரோக்கியம் கவலைக்குரியதாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்து அவர்களது கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குகின்றன. இதன் மூலம் அவர்கள் உயர்நிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் வாய்ப்புகளைப் பெறவும், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறவும் வழிவகை செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் கல்வியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியம் உட்பட மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றன. தற்போது, நாடு முழுவதும் 401 ஏகலைவா பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன.
***
ANU/SM/PLM/RS/KRS/DL
(रिलीज़ आईडी: 2007457)
आगंतुक पटल : 89