மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 19 FEB 2024 3:31PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்போது மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, உள்நாட்டு மீன்வள இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, ஓஎன்டிசி திரு கோஷி மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர். "மீன்பிடிப்பது முதல் வர்த்தகம் வரை, டிஜிட்டல் உருமாற்றத்தின் மூலம் சந்தை அணுகலை அதிகரித்தல்" என்ற கையேட்டையும் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்.

பாரம்பரிய மீனவர்கள், மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள், மீன்வளத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்கெடுப்பாளர்கள் மின்னணு சந்தை மூலம் தங்கள் தயாரிப்புகளை வாங்கவும், விற்கவும் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குவதும், மீன்வளத் துறையை ஓஎன்டிசி-யுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமாகும். மீனவர்கள், மீன் வளர்ப்போர், உழவர் அமைப்பினர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர மீனவர் கூட்டுறவு அமைப்புகளை ஒருங்கிணைத்து மின்னணு சந்தைப்படுத்துதலில் முக்கிய பங்கு வகிக்கும் தனித்துவமான மின்னணு சந்தைப்படுத்துதலை ஓஎன்டிசி மேற்கொள்ளும்

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகளின் (எஃப்எஃப்பிஓ) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். ஓஎன்டிசி தளத்தில் சேருவதற்கு முன்பும் பின்பும் தங்கள் அனுபவங்களை எஃப்எஃப்பிஓ-க்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்,  மீன்களை உயிருடன் விற்பனைக்கு கொண்டு செல்வது, போன்ற தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முயற்சிகளை பாராட்டிய திரு ரூபாலா, மீன் பொருட்களை பதப்படுத்துவதில் எதிர்காலத்தில் மேலும் தானியங்கி முறையை பின்பற்ற ஊக்குவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்ற திரு பர்ஷோத்தம் ரூபாலா, மதிப்புச் சங்கிலி மற்றும் மீன் பதப்படுத்தும் அலகுகளில் தானியங்கி மயமாக்கலின் அவசியத்தை வலியுறுத்தினார்.  ஓஎன்டிசி-யுடனான மீன்வளத் துறையின் இந்த ஒத்துழைப்பு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், இந்திய மீன்வளத் துறையில் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறனை மேற்கொள்வதற்கும் ஊக்கமளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

குறைக்கப்பட்ட பரிவர்த்தனை செலவுகள், அதிகரித்த சந்தை அணுகல், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, அதிகரித்த போட்டித்தன்மை, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற மீன்வளத் தொழில்களுக்கு ஒத்துழைப்பு பல நன்மைகளை வழங்கும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், பாரம்பரிய மீனவர்கள், எஃப்எஃப்பிஓ-க்கள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்களுக்கு மின்னணு சந்தை மூலம் மீன் மற்றும் மீன் பொருட்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் டிஜிட்டல் தளத்தை வழங்குவது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை நிறைவேற்றுவதற்காக மீன்வளத்துறை மற்றும் ஓஎன்டிசி இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

.என்.டி.சி உடனான மீன்வளத் துறையின் ஒத்துழைப்பு புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என்றும், இந்த முயற்சி மதிப்பு கூட்டப்பட்ட மீன்வளம் தொடர்பான தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தையும் வழங்கும் என்றும், இது உற்பத்தியாளர்கள் அதிக லாபத்தைப் பெறவும், அவர்களின் தயாரிப்பு வழங்கல்களை பல்வகைப்படுத்தவும் அனுமதிக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பகிர்ந்து கொண்டார். உள்நாட்டு மீன் நுகர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து பாரம்பரிய மீனவர்களையும், எஃப்.எஃப்.-க்களையும் மீன் பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் டிஜிட்டல் மேடையில் இணைக்கும் டிஓஎஃப் -இன் இந்த முயற்சி உள்நாட்டு மீன் நுகர்வை ஊக்குவிக்க உதவும் என்று எடுத்துரைத்தார்.

டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு மீனவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் அணுகல் குறித்து எடுத்துரைத்தார். தரம், சான்றிதழ்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பங்கெடுப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்தவும், அவற்றில் உள்ள விருப்பங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கவும் முடியும் என்று அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள், மீன் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட சுமார் 120 பங்கெடுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நீலப்புரட்சி, பிரதமரின் மத்ஸய சம்பதாத் திட்டம், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிசான் கடன் அட்டை மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மீன்வளத் துறையை விரிவான முறையில் மாற்றியமைப்பதிலும், பொருளாதார மேம்பாடு மற்றும் வளத்தைக் கொண்டுவருவதிலும் அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது. உலக மீன் உற்பத்தியில் 8% பங்களிப்புடன், இந்தியா வளர்ப்பு இறால் உற்பத்தியாளரில் முதல் நாடாகவும், வளர்ப்பு மீன் உற்பத்தியில் 2-வது பெரிய நாடாகவும், 3-வது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதியில் 4-வது பெரிய நாடாகவும் உள்ளது.

***

ANU/AD/BS/RS/KV/DL


(Release ID: 2007141) Visitor Counter : 114