வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா - பெரு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுக்கள் குறித்த கூட்டறிக்கை

Posted On: 15 FEB 2024 11:25AM by PIB Chennai

இந்தியா – பெரு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த 6-வது பேச்சு வார்த்தை பெரு தலைநகர் லிமாவில் 2024 பிப்ரவரி 12 முதல் 14 வரை நடைபெற்றது. இந்தியத் தூதர் திரு விஸ்வாஸ் சப்கல்; இந்தியாவின் சார்பில் திரு விபுல் பன்சால், பெருவின் சார்பில் திரு ஜெரார்டோ மேசா, மற்றும் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

2019, ஆகஸ்ட் வரை வெற்றிகரமாக நடைபெற்ற 5 சுற்றுப் பேச்சுக்களுடன் தொற்றுநோய்க்கு முன்பு இந்தியாவும், பெருவும் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே, திறமையுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பெருவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை  துணை அமைச்சர் திருமதி தெரசா மேராவும், இந்தியாவின் சார்பில் பேச்சுக்களில் தலைமை தாங்கிய திரு விபுல் பன்சாலும் வலியுறுத்தினார்கள்.

ஒருமித்த கருத்தை எட்டும் வகையில்,  பேச்சுவார்த்தை செயல்முறையை நடைமுறைவாதத்துடன் முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் வலியுறுத்தின. இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அவர்களின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளையும் வலுப்படுத்தும்.

இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளிலிருந்தும் 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அந்தந்தப் பேச்சுவார்த்தை குழுக்கள் உட்பட ஒன்றாகப் பங்கேற்றனர். பெரு நாட்டின் தரப்பு தூதுக்குழு வெளிநாட்டு வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் வழிநடத்தப்பட்டது, பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், வேளாண் அமைச்சகம், சுங்க நிர்வாகம் போன்ற பிற நிறுவனங்களின் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.  இந்திய தரப்பிலிருந்து, அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் துறை, வருவாய் துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் சட்டப் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்த சுற்று பேச்சுக்கள்  2024 ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

----

(Release ID: 2006188)

ANU/PKV/IR/KPG/KRS



(Release ID: 2006332) Visitor Counter : 43