பிரதமர் அலுவலகம்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 11 FEB 2024 12:29PM by PIB Chennai

வணக்கம்!
மதிப்பிற்குரிய துறவிகளே, குஜராத்தின் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, ஆரிய சமாஜத்தின் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த தினத்தை நாடு கொண்டாடி வருகிறது. சுவாமியின் பங்களிப்புகளை நினைவுகூரவும், அவரது செய்தியை மக்களிடம் பரப்பவும் இந்த ஆரிய சமாஜம் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு, இந்த விழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இணையற்ற பங்களிப்பு கொண்ட ஒரு மகத்தான ஆத்மாவுடன் இத்தனை மாபெரும் கொண்டாட்டத்தில் இணைவது இயல்பான ஒன்று. நமது புதிய தலைமுறையினருக்கு மகரிஷி தயானந்தரின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த ஊடகமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பாரதம் தனது 'அமிர்த காலத்தின்' ஆரம்ப ஆண்டுகளில் இருக்கும் நேரத்தில் சுவாமி தயானந்தரின் 200-வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. சுவாமி தயானந்தர் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்த ஒரு துறவி. பாரதத்தின் மீது சுவாமி கொண்டிருந்த நம்பிக்கையை, நமது 'அமிர்த காலத்தில்' நமது தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். சுவாமி தயானந்தர் நவீனத்துவத்தின் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அவரால் உத்வேகம் பெற்று, நம் நாட்டை 'வளர்ச்சியடைந்த பாரதமாக’ மாற்ற, இந்த 'அமிர்த காலத்தில்' பாரதத்தை நவீனத்தை நோக்கி நாம் அனைவரும் வழிநடத்த வேண்டும். 
இந்திய விழுமியங்களுடன் தொடர்புடைய கல்விமுறை காலத்தின் தேவையாகும். ஆரிய சமாஜத்தின் பள்ளிகள் இதற்குக் குறிப்பிடத்தக்க மையங்களாக இருந்தன. தேசிய கல்விக் கொள்கை மூலம் அதை நாடு இப்போது விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பாகும். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, தற்சார்பு இந்தியா இயக்கம், சுற்றுச்சூழலுக்கான நாட்டின் முயற்சிகள், நீர் சேமிப்பு, தூய்மை இந்தியா திட்டம், லைஃப் இயக்கம் போன்றவை இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இயற்கைக்கான நீதியை உறுதி செய்பவையாகும். நமது சிறுதானியங்களான  ஸ்ரீஅன்னாவை ஊக்குவித்தல், யோகா, உடற்பயிற்சியை ஊக்குவித்தல், விளையாட்டுகளில் பங்கேற்பதை அதிகரித்தல் ஆகியவை அனைத்தும் அவசியம். ஆரிய சமாஜத்தின் கல்வி நிறுவனங்களும் அவற்றில் படிக்கும் மாணவர்களும் சேர்ந்து மிக முக்கியமான சக்தியாக விளங்குகிறார்கள். இந்த அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும்.
நண்பர்களே,
இந்த அனைத்து சமூக முயற்சிகளுக்கும், மத்திய அரசின் புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞர் அமைப்பின் சக்தியும் உங்களிடம் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மற்றும் இளைய அமைப்பின் பெயர் "எனது இளைய இந்தியா – மை பாரத்". டிஏவி கல்வி நிறுவனங்களின் அனைத்து மாணவர்களையும் மை பாரத்-ல்  சேர ஊக்குவிக்குமாறு தயானந்த் சரஸ்வதியின் அனைத்து ஆதரவாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை மகரிஷி தயானந்தரின் 200ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகரிஷி தயானந்தருக்கும், அனைத்து மகான்களுக்கும் மீண்டும் ஒரு முறை மரியாதையுடன் தலை வணங்குகிறேன்.
மிகவும் நன்றி!


******


(Release ID: 2004938)
ANU/SMB/BS/AG/KRS



(Release ID: 2005682) Visitor Counter : 57