உள்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று நடைபெற்ற சுத்தூர் ஜாத்ர மகோத்சவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை உலக அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமைப்படுத்தியுள்ளார்: உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
11 FEB 2024 6:25PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று (11-02-2024) நடைபெற்ற சுத்தூர் ஜாத்ர மகோத்சவத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமித் ஷா தமது உரையில், சுத்தூர் மடம் தன்னலமற்ற சேவை, உழைப்பு, மற்றும் தானம் என்ற மூன்று அம்சங்களின் மையமாக உள்ளது என்று கூறினார். பல நூற்றாண்டுகளாக சுத்தூர் மகா சமஸ்தான மடத்திற்கு தலைமை தாங்கிய துறவிகள் சேவையின் பாரம்பரியத்தை தடையின்றி தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக இந்த மடம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 6 முதல் 11 (இன்று) வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா ஒரு வகையில் நமது கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். ரதோற்சவம், தபோத்சவம் உட்பட பல பண்டிகைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன என்று அவர் கூறினார். திருவிழாவின் போது, விவசாய கண்காட்சி, மல்யுத்தம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன என்றும், ஒரு வகையில் சமூக வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து திருவிழா கொண்டாடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிகள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல நல்ல அம்சங்களைச் செய்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த மடத்தின் கீழ் சுமார் 350 கல்வி நிறுவனங்கள் இருப்பதாகவும், 20,000 க்கும் மேற்பட்டோர் பணிபுரிவதாகவும், அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மடம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக ஒரு பாலிடெக்னிக் நிறுவனத்தை நிறுவியுள்ளது என்றும், இந்த முயற்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயின்று வருவதாகவும் அவர் கூறினார். சுத்தூர் மடம் தமது கிளையை அயோத்தியில் நிறுவ முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்கில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமைப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார். நாட்டைப் பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாற்றுவதுடன், யோகா, ஆயுர்வேதம் மற்றும் நமது மொழிகளைப் பாதுகாக்கவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.
*******
ANU/AD/PLM/DL
(Release ID: 2005074)
Visitor Counter : 82