பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு பட்டியல் பழங்குடியினர் திருத்தச் சட்ட மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது


ஜம்மு காஷ்மீர், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எஸ்.டி பட்டியலில் சில புதிய சமூகங்கள் சேர்க்கப்பட உள்ளன

பழங்குடியின சமுதாயத்தினரின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் மேம்பாட்டிற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா

Posted On: 11 FEB 2024 9:43AM by PIB Chennai

பழங்குடியின சமூகங்களின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை  அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின சமூகங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்கள் குறித்து பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் (திருத்தம்) மசோதா- 2024, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பழங்குடியினர் பட்டியலில் 'பஹாரி இனக்குழு, படரி பழங்குடியினர், கோலி மற்றும் காடா பிராமணர்' சமூகங்களை சேர்க்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் 9 பிப்ரவரி 2024 அன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் 6 பிப்ரவரி 2024 அன்று  நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் தொடர்பான அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) (திருத்தம்) மசோதா - 2024 மற்றும் ஒடிசாவைப் பொறுத்தவரை அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்) (திருத்தம்) மசோதா - 2024 ஆகியவை அந்தந்த பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு மக்களவையில் 8 பிப்ரவரி 2024 அன்று நிறைவேற்றப்பட்டன. பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார்  மக்களவையில் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா முன்னதாக 6 பிப்ரவரி 2024 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் உள்ள பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்த மசோதா மூலம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் கூறினார்.

இந்த மசோதாக்கள் சட்டமாக மாறிய பிறகு, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பட்டியல் பழங்குடியினர் திருத்தப்பட்ட பட்டியலில் புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள சமூகங்களின் உறுப்பினர்களும் தற்போதுள்ள திட்டங்களின் கீழ் பழங்குடியினருக்கான பலன்களைப் பெற முடியும். அரசுக் கொள்கையின்படி அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டுப் பயன்களையும் பெற அவர்களுக்கு உரிமை உண்டு.

----

 

ANU/PKV/PLM/DL


(Release ID: 2004953) Visitor Counter : 203