பாதுகாப்பு அமைச்சகம்
ரியாதில் உள்ள பாதுகாப்பு மேம்பாட்டுக்கான சவுதி பொது ஆணையத்தைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பார்வையிட்டார். அதன் தலைவருடனான பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளின் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்
Posted On:
09 FEB 2024 10:49AM by PIB Chennai
ரியாதில் நடைபெற்ற உலகப் பாதுகாப்புக் கண்காட்சி 2024-க்கான இந்தியத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், 2024, பிப்ரவரி 08, அன்று தனது சவுதி அரேபியா பயணத்தை நிறைவு செய்தார். பாதுகாப்புத்துறை இணையமைச்சர், தனது நிகழ்ச்சிகளின் இறுதி நாளில், பாதுகாப்பு மேம்பாட்டுக்கான பொது ஆணையத்திற்குச் சென்று அதன் ஆளுநர் டாக்டர் ஃபலேஹ் பின்-அப்துல்லா அல்-சுலைமானை சந்தித்தார். இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவுக்கு வருகைதர அவருக்குப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அழைப்பு விடுத்தார்.
திரு அஜய் பட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கிங் அப்துல் அஜீஸ் நகரத்திற்கு சென்று அதன் தலைவர் டாக்டர் முனீர் எம் எல்டெசோகியை சந்தித்தார். ஆய்வகங்கள், உற்பத்தித் தளங்கள் உட்பட கே.ஏ.சி.எஸ்.டி. வளாகத்தை அவர் பார்வையிட்டார்.
பிப்ரவரி 07 அன்று, ரியாதில் உள்ள சவுதி அரேபிய ராணுவத் தொழில்துறை - மேம்பட்ட மின்னணு நிறுவனத்தின் தலைமையகத்திற்குப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சென்றார். பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விவாதங்களில் ஈடுபட்டனர். பின்னர், திரியாவில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான அல்-துரைஃபைப் பார்வையிட்டார்.
ரியாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திரு அஜய் பட்டை கௌரவிக்கும் வகையில், ஒரு சமூக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், நாட்டின் முழுமையான வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவது குறித்துப் பேசினார். ரியாதில் உள்ள இந்தியப் பள்ளிகளின் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது, இது இந்தியப் பாரம்பரியத்தின் செழுமை மற்றும் எல்லைகளைக் கடந்த ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்தியது.
இந்தியத் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகிய மூன்று சேவைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், ரியாதில் உள்ள பல்வேறு சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கான வாய்ப்புகளைப் பற்றி அறிய மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர். மேலும் மன உறுதி, ஆர்வம் மற்றும் வெற்றி பற்றிய கதைகளைக் கேட்டு பரவசமடைந்தனர்.
பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் வருகை, இருதரப்பு உறவுகளின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறந்துள்ளதுடன் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.
***
(Release ID: 2004274)
ANU/SMB/BS/RS/KRS
(Release ID: 2004589)
Visitor Counter : 94