பிரதமர் அலுவலகம்

பிப்ரவரி 6 அன்று பிரதமர் கோவா பயணம்


இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ. 1330 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்

வேலைவாய்ப்பு விழா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசுப் பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குகிறார்


Posted On: 05 FEB 2024 11:04AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 6, 2024) கோவாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:30 மணியளவில், ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். 10:45 மணியளவில், அவர் 2024 இந்திய எரிசக்தி வாரத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், பிற்பகல் 2:45 மணியளவில், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இந்தியா எரிசக்தி வாரம் 2024

எரிசக்தித் தேவைகளில் தற்சார்பு நிலையை அடைவது பிரதமரின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்தத் திசையில் மற்றொரு படியாக, இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி மதிப்புச் சங்கிலியை ஒன்றிணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எரிசக்திக் கண்காட்சி மற்றும் மாநாடாக இது இருக்கும். இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கு ஓர் ஊக்கியாக இது செயல்படும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேசை ஆலோசனை நடத்துகிறார்.

புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து மேம்படுத்துதல், அவற்றை எரிசக்தி மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைத்தல் ஆகியவை 2024-ம் ஆண்டின் இந்திய எரிசக்தி வாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளின் பிரத்யேக அரங்குகள் இதில் இடம்பெறும். எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முன்னெடுத்துச் செல்லும் புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு மேக் இன் இந்தியா அரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047

கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட வளாகத்தில் டுடோரியல் வளாகம், துறை வளாகம், கருத்தரங்கு வளாகம், நிர்வாக வளாகம், விடுதிகள், சுகாதார மையம், பணியாளர் குடியிருப்புகள், வசதி மையம், விளையாட்டு மைதானம் மற்றும் நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிற பயன்பாடுகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.

தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கான நீர் விளையாட்டுகள் மற்றும் நீர் மீட்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 28 தனிப்பயனாக்கப்பட்ட படிப்புகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும். தெற்கு கோவாவில் 100 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது நாளொன்றுக்கு 60 டன் ஈரமான கழிவுகள் மற்றும் 40 டன் உலர் கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உபரி மின்சாரத்தை உருவாக்கும் 500 கிலோவாட் சூரிய மின் நிலையத்தையும் கொண்டுள்ளது.

பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸை இணைக்கும் சுற்றுலா நடவடிக்கைகளுடன் பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

மேலும், வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அவர் விநியோகிப்பார். பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் அவர் வழங்குவார்.

ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையம்

ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையம், உலகத் தரத்திலான பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/SMB/PKV/AG/KV



(Release ID: 2002525) Visitor Counter : 114