உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா ஜம்முவில் மின்சார பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார், மேலும் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைந்த தேர்வு -2024 மற்றும் கருணை நியமனத்திற்கான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை வழங்கினார்
Posted On:
25 JAN 2024 4:06PM by PIB Chennai
புதுதில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஜம்முவில் மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்த மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைந்த தேர்வு -2024 மற்றும் கருணை நியமனத்திற்கான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.
அப்போது பேசிய திரு அமித் ஷா, 100 முழுமையாக குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகள் ஜம்மு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், 561 கோடி ரூபாய் செலவில் 12 ஆண்டுகளுக்கு இந்த பேருந்துகளை இயக்கி பராமரிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பரப்பியுள்ளது என்றும், இந்த திசையில் சிறந்த நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் மின்சார பேருந்துகளுக்கான திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தியுள்ளது என்றும், அதே நடவடிக்கையின் கீழ், ஜம்முவில் இன்று 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இவற்றில் 25 பேருந்துகள் 12 மீட்டர் நீளமும், 75 பேருந்துகள் 9 மீட்டர் நீளமும் கொண்டவை என்று கூறிய அவர், ஜம்மு பகுதி மக்களுக்காக நம்பகமான, வசதியான, சிக்கனமான மற்றும் நீடித்த பொதுப் போக்குவரத்து வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த பேருந்துகள் ஜம்முவிலிருந்து கத்ரா, கதுவா, உதம்பூர் மற்றும் ஜம்முவின் உள் வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த பேருந்துகள் வரும் நாட்களில் மக்களின் பயண சிரமங்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைந்த தேர்வு -2024 தொகுப்பில் வெற்றி பெற்ற 209 விண்ணப்பதாரர்களும் இன்று தங்கள் நியமன ஆணைகளை பெற்றுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இவர்களில் 96 பேர் ஜம்மு & காஷ்மீர் நிர்வாக சேவை அதிகாரிகள், 63 பேர் கணக்கு மற்றும் அரசிதழ் சேவை அதிகாரிகள் மற்றும் 50 பேர் காவல்துறை அதிகாரிகள் என்று தெரிவித்தார். இன்று முதல் இந்த அதிகாரிகளின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த நேரத்தில் இந்த அதிகாரிகளின் சிந்தனை அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் வழி வகுக்க உதவும் என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள வெளிப்படையான முறையின் காரணமாக, இந்த அதிகாரிகள் தகுதியின் அடிப்படையில் இந்த வேலைகளைப் பெற்றுள்ளனர் என்று திரு ஷா கூறினார். மோடியின் ஆட்சிக் காலத்தில், பரிந்துரை அடிப்படையில் பணிகள் வழங்கப்படுவதில்லை என்றும், மாறாக தேர்வுத் தாள்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். முன்பெல்லாம் அரசியல் பரிந்துரை அல்லது ஊழல் இல்லாமல் வேலை கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் கூறினார். தற்போது ஜம்மு-காஷ்மீர் ஒரு மாற்றத்தின் கட்டத்தை சந்தித்து வருகிறது என்றும், பயங்கரவாதம், குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பதிலாக, இப்போது ஆய்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள், உள்கட்டமைப்பு ஆகியவை இங்கு காணப்படுகின்றன என்றும் திரு அமித் ஷா கூறினார்.
கருணை அடிப்படையில் பணி நியமனத்தின் கீழ் 885 பேர் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர் என்று திரு அமித் ஷா கூறினார். 2019 ஆகஸ்ட் முதல் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், 34,440 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, அவற்றில் 24,000 ஜம்மு-காஷ்மீர் சேவை தேர்வு வாரியத்தாலும், 3900 ஜம்மு-காஷ்மீர் பொது சேவை ஆணையத்தாலும், 2637 ஜம்மு-காஷ்மீர் காவல்துறையாலும், 2436 ஜம்மு-காஷ்மீர் வங்கியாலும் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நியமனங்களை நிரப்புவதில் ஊழலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் திரு அமித் ஷா கூறினார்.
***
ANU/SMB/PKV/KPG/KRS
(Release ID: 1999732)
Visitor Counter : 112