பிரதமர் அலுவலகம்
தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியைத் திறந்து வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
16 JAN 2024 6:23PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு எஸ். அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு பங்கஜ் செளத்ரி அவர்களே, திரு பகவத் கிஷன்ராவ் கரத் அவர்களே, பிரதிநிதிகளே, தாய்மார்களே, பெரியோர்களே.
தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் அற்புதமான வளாகத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வளாகம் தனித்துவமானது. ஆன்மீகம், நாட்டைக் கட்டமைத்தல், நல்லாட்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய நமது பாரம்பரியத்தை இந்தப் பிராந்தியம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறப்பிடம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சுதந்திரப் போராட்ட வீரர் பத்மஸ்ரீ கல்லூர் சுப்பா ராவின் பூமி இது. இது புகழ்பெற்ற பொம்மலாட்டக் கலைஞரான தளவாய் சலபதி ராவுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. விஜயநகரத்தின் புகழ்மிக்க வம்சத்தின் ஆட்சிக்கு உத்வேகம் அளிக்கும் பூமி இது. அத்தகைய எழுச்சியூட்டும் இடத்தில் 'தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி'யின் இந்தப் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் நல்லாட்சிக்கான புதிய தரங்களை அமைக்கும் என்றும், நாட்டில் வர்த்தகம், தொழில்துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
'தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி'யின் பங்கு, நாட்டிற்கு ஒரு நவீன சூழல் அமைப்பை வழங்குவதாகும். இது நாட்டில் வர்த்தகத்தை எளிதாக்குகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு முக்கியப் பங்குதாரராக மாற்றி நட்புச் சூழலை உருவாக்குகிறது.
உங்கள் அனைவருக்கும் அரசு பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளது. இந்த சக்திகளின் பயன்பாடு உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. மேலும் நீங்கள் ராமரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகத்தைக் காண்பீர்கள்.
நண்பர்களே,
நமது வரிவிதிப்பு முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். வரியாகப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் பொதுநலனுக்காக முதலீடு செய்யப்பட வேண்டும், அது செழிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதே நமது முயற்சியாக இருக்க வேண்டும். அதே தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் வரி அமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். முன்பெல்லாம் நாட்டில் சாதாரண குடிமகன் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு வரி முறைகள் இருந்தன. வெளிப்படைத் தன்மை இல்லாததால், நேர்மையாக வரி செலுத்துவோரும், வணிகத்துடன் தொடர்புடையவர்களும் பாதிக்கப்பட்டனர். நாட்டிற்கு நவீன முறையை வழங்குவதற்காக ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தினோம். வருமான வரி முறையையும் அரசு எளிமைப்படுத்தியது. நாட்டில் முகமற்ற வரி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தினோம். இந்தச் சீர்திருத்தங்களின் விளைவாக, நாடு இப்போது வரி வசூலில் சாதனை படைத்துள்ளது. அரசின் வரி வசூல் அதிகரிக்கும் போது, பல்வேறு திட்டங்கள் மூலம் பொதுமக்களின் பணத்தை அரசு திருப்பி அளித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, 2 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு மட்டுமே வரிச்சலுகை வழங்கப்பட்டது. இந்த வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தினோம். 2014-ம் ஆண்டு முதல், எங்கள் அரசு வரி நிவாரணம் வழங்கி சீர்திருத்தங்களை செயல்படுத்தியது. இதன் விளைவாக குடிமக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் வரி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக முக்கியத் திட்டங்களை அரசு செயல்படுத்தி, நவீன உள்கட்டமைப்பில் சாதனை முதலீடுகளை செய்து வருகிறது. தற்போது, வரி செலுத்துவோர் தங்கள் பணம் சரியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணும்போது, அவர்கள் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வருகிறார்கள். எனவே, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது பொதுமக்களிடம் இருந்து நாங்கள் சேகரித்த அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்குகிறோம். இது நல்லாட்சி, இதுதான் ராம ராஜ்ஜியத்தின் செய்தி.
நண்பர்களே,
ஏழைகளின் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பிற்காகவும், அவர்களின் வசதிகளை மேம்படுத்தவும் எங்கள் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஏழைகளின் திறன்கள் அதிகரித்து, அவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டபோது, அவர்கள் வறுமையை வென்று அதையும் தாண்டிச் செல்லத் தொடங்கினர். ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்னதாக இது நாட்டிற்கு மற்றொரு நல்ல வளர்ச்சியாகும். நாட்டில் வறுமையைக் குறைப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, நீங்களும். தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியும் அத்தகைய சூழ்நிலையில் தங்கள் பொறுப்புகளை இன்னும் தீவிரத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
உங்கள் அனைவரையும் நான் மீண்டும் வாழ்த்துகிறேன். நன்றி!
-------
ANU/SMB/IR/KPG/KV
(Release ID: 1996904)
Visitor Counter : 96
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam