நிலக்கரி அமைச்சகம்
ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
தமிழகம், ஒடிசா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் குறைந்த செலவில் மின்சாரம் பெறும்
Posted On:
13 JAN 2024 11:34AM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட (3 x 800 மெகாவாட் - நிலை 1) பிட் ஹெட் கிரீன் ஃபீல்ட் அனல் மின் திட்டத்தை அமைப்பதற்கான ஐபிசி வழியிலான ஒப்பந்தத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் மிக உயர்ந்த வெப்பம் மற்றும் அழுத்தத்தில் செயல்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் உற்பத்தியாகும் 2400 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது.
பாய்லர்கள், டர்பைன், ஜெனரேட்டர்கள், ஆலைகளின் சமநிலை, எஃப்ஜிடி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற உபகரணங்களின் பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவை 3 X800 மெகாவாட் - 2400 மெகாவாட் நிலை -1-ல் அடங்கும்.
இந்த அனல் மின் திட்டத்திற்காக, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில் 2020 முதல் செயல்பட்டு வரும் என்.எல்.சி.ஐ.எல் இன் தலாபிரா 2 மற்றும் 3 சுரங்கங்களிலிருந்து ஆண்டுக்கு 20 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஹிராகுட் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஐ.எஸ்.டி.எஸ் மற்றும் எஸ்.டி.யு நெட்வொர்க் மூலம் வெளியே அனுப்பப்படும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்ற எஃப்.ஜி.டி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற சமீபத்திய மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் இந்த திட்டம் செயல்படும். எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பசுமை முன்முயற்சியின் ஒரு பகுதியாக பயோ மாஸ் கையாளுதல் அமைப்புகளுடன் இணைந்து கொதிகலன்கள் வடிவமைக்கப்படும்.
இத்திட்டத்தின் முதல் அலகு 2028-29 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. பிட் ஹெட் அனல் மின் திட்டம் என்பதால், மாறுபடும் செலவு குறைவாகவே இருக்கும். மேலும் என்.எல்.சி இந்தியா, அதன் பயனாளிகளுக்குக் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும்.
*****
ANU/PKV/SMB/DL
(Release ID: 1995850)
Visitor Counter : 122