பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பங்கு குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்
Posted On:
09 JAN 2024 6:32PM by PIB Chennai
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பங்கு குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் காணொலிக் காட்சி மூலம் புதுதில்லியில் இன்று (09.01.2024) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் "பாலின அடிப்படையிலான வன்முறைகளற்ற பஞ்சாயத்துகள் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான கையேடு" என்ற நூலையும் அமைச்சர் வெளியிட்டார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்தியாவுக்கான ஐநா மக்கள் தொகை நிதியம் ஆகியவை இணைந்து இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்தன.
நிகழ்ச்சியில் பேசிய திரு கிரிராஜ் சிங், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஒரு பகுதியாக பரந்த விழிப்புணர்வு, கூட்டு உறுதிப்பாடு ஆகியவை அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய ஒரு முழுமையான அணுகு முறை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இதற்காக பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதிலும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். மகளிர் மேம்பாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கனவுகளை நனவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு கிரிராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், கிராமப்புறங்களில் பெண்களுக்கு சிறந்த சூழலை உருவாக்குதல் குறித்த 9 கருப்பொருள்களைக் குறிப்பிட்டு, இவை தொடர்பாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பயனுள்ள முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
-----
(Release ID: 1994617)
ANU/SM/PLM/KPG/KRS
(Release ID: 1994647)