மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதுதில்லியில் தேசிய கலை உற்சவம் 2023-ன் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்
Posted On:
09 JAN 2024 5:47PM by PIB Chennai
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (09.01.2024) கலை உற்சவம் 2023-ன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியும் பங்கேற்றார். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலர் திரு. சஞ்சய் குமார், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல்; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் பேராசிரியர் தினேஷ் பிரசாத் சக்லானி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வளர்ப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை இந்தக் கலை உற்சவ நிகழ்ச்சி ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த நாடும் இந்தியக் குழந்தைகளின் திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ல் விளையாட்டு அடிப்படையிலான கற்றல், விளையாட்டுகள், கலை, கைவினைத் திறன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திறன்களின் அடிப்படையில் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தவும் 21-ம் நூற்றாண்டின் தலைவர்களாக அவர்களை உருவாக்கவும் அனைத்து ஆக்கபூர்வமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கொள்கை 2020, தேசமே முதன்மையானது என்ற உணர்வுடன் பெரிய இலக்குகளை அடைய மாணவர்களை தயார்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். கலை உற்சவத்தை நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ப ஒரு பரந்த தளத்தை வழங்குவதன் மூலம் மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
பார்வையாளர்களுடன், குறிப்பாக கலை உற்சவத்தில் பங்கேற்ற இளைஞர்களுடன் கலந்துரையாடிய அவர், அமிர்த காலத்தில் இளஞைர்களின் பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டினார். இதனை உணர்ந்து செயல்படும் போது அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பாரதத்தை எளிதில் கட்டமைக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகவும் குழந்தைகளின் அசாத்திய திறன்களை அவர் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குழந்தைகளின் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலை சார்ந்த கற்றலை புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 ஊக்குவிப்பதாக அவர் கூறினார். கலை உற்சவத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள், மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் இடம் பெறுவதாகவும் இவை எளிதில் அடுத்த தலைமுறையை சென்றடையும் என்றும் திருமதி அன்னபூர்னா தேவி கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) ஆகியவை இணைந்து 2024 ஜனவரி 9 முதல் 12 வரை புதுதில்லியில் இந்தக் கலை உற்சவ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கலை உற்சவ விழாவில் குரலிசை, நடனம், நாடகம் உள்ளிட்ட 10 கலை வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சங்கம் மற்றும் நவோதயா வித்யாலயா சமிதி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
நிறைவு விழா 2024 ஜனவரி 12 அன்று நடைபெறும். சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு இதில் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.
----
(Release ID: 1994602)
ANU/SMB/PLM/KPG/KRS
(Release ID: 1994634)
Visitor Counter : 113