பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கம்போடியாவின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம் குறித்த 2 வார பயிற்சித் திட்டம் முசோரியில் உள்ள என்.சி.ஜி.ஜியில் தொடங்கியது
Posted On:
09 JAN 2024 5:25PM by PIB Chennai
மத்திய அரசின் உயர்நிலை தன்னாட்சி பெற்ற நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்.சி.ஜி.ஜி) கம்போடியாவின் 38 குடிமைப்பணி அதிகாரிகளுக்குப் பொதுக்கொள்கை மற்றும் நிர்வாகம் குறித்த மூன்றாவது பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஜனவரி 8 முதல் 19-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இந்தப் பயிற்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கேற்ப அண்டை நாடுகளுடன் பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்க என்சிஜிஜி முயற்சி மேற்கொண்டுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க அமர்வுக்கு என்சிஜிஜியின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளருமான திரு வி.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார். வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடமையைக் கையாண்டு, பொதுமக்களை அரசுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர் விளக்கினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற மந்திரத்தை மேற்கோள் காட்டிய அவர், அதனை அடைய தேசம் எவ்வாறு பாடுபடுகிறது என்பதை விவரித்தார்.
அடுத்தத் தலைமுறை நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றம் குறித்தும், சேவை வழங்கலை எளிமைப்படுத்த இது எவ்வாறு வழிவகுத்தது என்பது குறித்தும் பேசினார். இந்தியாவில் சேவை, தர நிர்ணயம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும், மத்திய குறை தீர்க்கும் அமைப்பு எவ்வாறு நிலுவையைக் குறைப்பதற்கும், குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் வழிவகுத்தது என்பது குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
2047-ம் ஆண்டில் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்ட அவர், நல்லாட்சி நடைமுறைகள் மற்றும் பிரதமர் விருதுகள், தேசிய குடிமைப்பணிகள் தினம், நல்லாட்சி வாரம் போன்ற விழிப்புணர்வு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது நல்லாட்சியில் தொடர்ச்சியான மேம்பாடுகளுக்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அஞ்சல் துறையின் துணைத் தலைமை இயக்குநர் திரு கெங் பிசேத், கம்போடிய அரசு அதிகாரிகளுக்கு இதுபோன்ற பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்காக திரு வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் என்.சி.ஜி.ஜி குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
2014-ம் ஆண்டில் நிறுவப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய மையம், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, டுனீசியா, காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், பூட்டான், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த மையம் வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது.
***
(Release ID: 1994589)
ANU/SMB/PKV/RS/KRS
(Release ID: 1994623)
Visitor Counter : 104