நிதி அமைச்சகம்
டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு பதினாறாவது நிதிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
Posted On:
31 DEC 2023 3:03PM by PIB Chennai
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280 (1) பிரிவின்படி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், பதினாறாவது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நித்தி ஆயோகின் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியா இதன் தலைவராக இருப்பார். பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்கள் நியமனம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். நிதிக்குழுவின் செயலாளராக திரு ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31-12-2023) வெளியிடப்பட்ட அறிவிப்பில் பதினாறாவது நிதிக்குழுவுக்கான விதிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.
பதினாறாவது நிதிக்குழு பின்வரும் அம்சங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்: -
(1) அரசமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1, பகுதி 12-ன் கீழ் பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்த பங்குகளை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்;
(2) இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை மானியமாக வழங்குவது மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 275 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு அவற்றின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகைகளை அந்த சட்டப்பிரிவு (1)-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தாண்டி வேறு நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்; மற்றும்
(3) மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக மாநில ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்.
பதினாறாவது நிதிக்குழு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005-ன் (2005-ன் 53) கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.
பதினாறாவது நிதிக் குழு தனது அறிக்கையை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது, இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி ஐந்தாண்டு காலத்தை உள்ளடக்கியது.
அரசிதழ் அறிவிப்பை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/dec/doc20231231295101.pdf
*****
(Release ID: 1991931)
(Release ID: 1991962)
Visitor Counter : 1088