ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்தியல் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

Posted On: 29 DEC 2023 3:25PM by PIB Chennai

2023 ஆம் ஆண்டில், மருந்துகள் துறையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் முக்கிய முயற்சியான 'பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான பொது மருந்துகளை வழங்குவதற்காக 10,000 சில்லறை விற்பனை நிலையங்களைத் திறந்திருப்பது, மருந்துகள் துறையில் உற்பத்தி திறனை வலுப்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தை (பி.எல்.ஐ) செயல்படுத்துவது ஆகியவற்றில் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது தவிர, மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மருந்துத் தொழிலை வலுப்படுத்துவதற்கும் இத்துறை இந்த ஆண்டில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

 

2023-ம் ஆண்டில் மருந்தியல் துறையின் சில முக்கிய செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பின்வருமாறு:

 

மக்கள் மருந்தகத் திட்டம்:

 

1.         பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம்  இந்தத் துறையின் ஒரு முக்கிய திட்டமாகும். 30.11.2023 நிலவரப்படி, நாடு முழுவதும் 10,006 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 

2.         தரமான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதும், அதன் மூலம் நுகர்வோர் மற்றும் நோயாளிகளின் செலவைக் குறைப்பதும், பொது  மருந்துகளை மக்களிடையே பிரபலப்படுத்துவதும் மக்கள் மருந்தகத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

3.         மக்கள் மருந்தகத் திட்ட மருந்துத் தொகுப்பில் 1965 மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளன. அவை தொற்று நோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, இதயம், புற்றுநோய் எதிர்ப்பு, இரைப்பை குடல் நோய்களுக்கான மருந்துகள் போன்ற அனைத்து முக்கிய மருந்துகளை உள்ளடக்கியது.  2023 ஆம் ஆண்டில், 206 மருந்துகள் மற்றும் 13 அறுவை சிகிச்சை உபகரணங்கள் இந்த தொகுப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

 

சுவிதா சானிட்டரி நாப்கின்கள்

 

1.         பெண்களுக்கு மலிவு விலையில் மாதவிடாய் சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் சுவிதா சானிட்டரி நாப்கின்கள் ஒரு பேட் ரூ.1/- க்கு நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் மூலம் கிடைக்கின்றன.

 

2.         30.11.2023 வரை, மொத்தம் 47.87 கோடிக்கும் அதிகமான சுவிதா சானிட்டரி நாப்கின்கள் மக்கள் மருந்தக மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

3.         2023 ஆம் ஆண்டில் மட்டும் 30.11.2023 வரை 15.87 கோடிக்கும் அதிகமான சுவிதா சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

மக்கள் மருந்தக சந்தை விரிவாக்க நடவடிக்கைகள்

 

1.         சந்தை விரிவாக்கத்தை உறுதி செய்ய இத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க தனியாருக்கு வாடகை இல்லாமல் இடங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

2.         மக்கள் மருந்தகங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக, அச்சு, மின்னணு, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.

 

மக்கள் மருந்தக தினக் கொண்டாட்டம் (மார்ச் 7, 2023):

 

1.         ஐந்தாவது மக்கள் மருந்தக தினம் 7 மார்ச் 2023 அன்று  கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் மாநில / யூனியன் பிரதேச அளவில் பிரமாண்டமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

 

மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம்:

 

1.         மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை  திட்டத்திற்கு ரூ. 3420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் காலம் 2020-21 முதல் 2027-28 வரை ஆகும். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

 

2.         இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 26 திட்டங்களில், 16 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 39 மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.879 கோடி முதலீடு செய்யப்பட்டு, 4,546 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.1654.09 கோடி ஏற்றுமதி உட்பட ரூ.3251.76 கோடி மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளது.

 

மருந்துகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்:

 

1.         மருந்துத் துறையில் முதலீடு மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் மருந்துகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.15,000 கோடி ஆகும். இத்திட்டத்தின் காலம் 2020-2021 முதல் 2028-29 வரை ஆகும்.

 

2.         இத்திட்டத்தின் கீழ், மூன்று தயாரிப்பு பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்ய நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

 

3.         2023 செப்டம்பர் வரை இத்திட்டத்தின் கீழ் ரூ. 25,813 கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, 56,171 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விற்பனை மதிப்பு ரூ. 1,16,121 கோடியாகும். இதில் ரூ. 75,141 கோடி ஏற்றுமதியும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் சிறப்பு வகை மருந்துகள்/ ஐ.வி.டி சாதனங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

 

இந்திய மருந்துகள் மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 2023:

 

1.         ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (ஃபிக்கி) இணைந்து, இந்திய மருந்துகள் மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை புதுதில்லியில் 2023 மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்தின. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

 

2.         இந்தக் கண்காட்சியின்போது அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை -20230-ஐ அறிமுகப்படுத்தியதுடன் மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலைத் தொடங்கி வைத்தார்.

 

மருத்துவத் தொழில்நுட்பக் கண்காட்சி

 

1.         இந்தியா மெட் டெக் எக்ஸ்போ (ஐ.எம்.டி.இ) 2023 என்ற முதலாவது இந்திய மருத்துவத் தொழில்நுட்பக் கண்காட்சி, மருந்துத் துறையால் 2023 ஆகஸ்ட் 17 முதல் 19 வரை காந்திநகரில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு இந்திய மருத்துவ சாதனங்கள் சூழல் அமைப்பின் வலிமையையும் திறனையும் வெளிப்படுத்தியது.

 

2.         இந்தக் கண்காட்சியில், 4000 க்கும் மேற்பட்ட வாங்குபவர்- விற்பவர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் 10,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் இதைப் பார்வையிட்டனர்.

 

 

மருந்துத் துறையில் அந்நிய நேரடி முதலீடு:

 

1.         இந்தியாவில் அந்நிய முதலீட்டிற்கான முதல் பத்து கவர்ச்சிகரமான துறைகளில் மருந்துத் துறையும் ஒன்றாக உள்ளது.

 

2.         2022-23 நிதியாண்டில் மருந்துத் துறையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் இரண்டிலும் அந்நிய நேரடி முதலீடு ரூ.19,077 கோடியாக இருந்தது.

 

 

3.         நடப்பு 2023-24 நிதியாண்டில் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை ரூ.4,456 கோடி அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. மேலும், 2023 ஏப்ரல் 1 முதல் 2023 நவம்பர் 30 வரை பல்வேறு திட்டங்களுக்காக ரூ.9,848 கோடி மதிப்புள்ள 6 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மருந்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

 

தேசிய மருத்துவ சாதன கொள்கை – 2023:

 

1.         26.04.2023 அன்று தேசிய மருத்துவ சாதனக் கொள்கை - 2023 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆறு பரந்த பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பின் மூலம், நோக்கங்களை அடைவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

2.         தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை - 2023 மருத்துவ சாதனத் தொழில்துறையை மேம்படுத்துவதற்குப் பின் வரும் ஆறு உத்திகளைக் குறிப்பிடுகிறது:-

 

 

•          ஒழுங்குமுறை நெறிப்படுத்தல்

•          உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்

•          ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்தை எளிதாக்குதல்

•          மருத்துவ சாதனங்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்தல்.

•          மனித வள மேம்பாடு

•          வணிகக் குறியீட்டை நிலை நிறுத்துதல் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கம்

 

******

(Release ID: 1991501)

 

 SMB/PLM/KRS


(Release ID: 1991946) Visitor Counter : 112