வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் பாரம்பரிய பொருட்கள், ஜவுளி, தொழில் துறை உற்பத்தி திறன்களை உலக அளவில் வெளிப்படுத்த அரசு ஊக்கம் அளிக்கிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 29 DEC 2023 1:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள், நெசவாளர்களின் ஜவுளி உற்பத்தி மற்றும் தொழில் துறை உற்பத்தித் திறன்களை வெளிப்படுத்த  அரசு ஊக்கமளித்து வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்தியாவை  உலகளாவிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கான (எம்ஐசிஇ) இடமாக மாற்ற அரசு ஊக்கப்படுத்தி வருவதாக அவர்  தெரிவித்தார்.

புதுதில்லியில் நேற்று (28.12.2023) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்தியாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்த  பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவின் நிலையை உயர்த்த அடுத்த சில மாதங்களில் தொடர்ச்சியான பெரிய நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024 ஜனவரி 3-ம் தேதி  முதல் 10-ம் தேதி வரை தற்சார்பு இந்தியா திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதைத் தொடர்ந்து  பல பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைவினைஞர்கள், நெசவாளர்கள், கதர், பழங்குடி கைவினைப் பொருட்கள், குறு, சிறு  மற்றும்  நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினரின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இவை உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

கிரேட்டர் நொய்டாவில் 2024 ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 'சிந்து உணவு' கண்காட்சி நடைபெறும் என்றும், இதில்  120 நாடுகளைச் சேர்ந்த 1100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறினார். மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஊக்குவித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும் இக்கண்காட்சி வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024' என்ற கண்காட்சி 2024 பிப்ரவரி 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது என்றும், இதில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகனத்தொழில் தயாரிப்புகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி 2024 பிப்ரவரி 26 முதல் 29-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி ஆகிய இரண்டிலும் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த பிரமாண்ட கண்காட்சி உலகின் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என திரு பியூஷ் கோயல் கூறினார்.

***

ANU/PKV/PLM/RS/KV



(Release ID: 1991541) Visitor Counter : 78