ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள்
Posted On:
21 DEC 2023 3:58PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகம், 2023ம் ஆண்டில், பிரதமரின் மித்ரா பூங்காக்களை தொடங்கியது முதல், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை வரை, பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
பிரதமரின் மித்ரா
ஜவுளித் தொழிலுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை 2027-28ம் ஆண்டுக்குள் ஏற்படுத்த, மத்திய அரசு, பிரதமரின் மித்ரா எனப்படும், பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்கள் அமைக்கும் பணியை ரூ.4445 கோடி செலவில் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம். உத்தரபிரதேச மாநிலங்களில், பிரதமரின் மித்ரா பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும்போது, ரூ.70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை : இத்திட்டத்தின்கீழ், இதுவரை சுமார் ரூ.2119 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் :
தனிச்சிறப்பு வாய்ந்த செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிக்காக, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின்கீழ், ரூ.371 கோடி மதிப்பிலான 126 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமர்த்
ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக, சமர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முறைசார்ந்த ஜவுளித் தொழில் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில், தொழில் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு உதவி செய்து, தேவைக்கேற்ற மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தேசிய திறன் தகுதி நடைமுறைகளை வழங்குவதே இதன் நோக்கம்.
தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி நிறுவனம் (NIFT)
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 9வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்திற்கு தலைமைவகித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, ‘பாரதிய வஸ்த்ரா எவம் ஷில்பா கோஷ் – ஜவுளி மற்றும் கைவினைகளின் களஞ்சியம்’ என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
பருத்தித் துறை
2023ம் ஆண்டில், சந்தை நிலவரம் காரணமாக, பஞ்சு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒட்டியே இருந்தது. எனவே, பருத்தி விவசாயிகளுக்கு உதவும் விதமாக, இந்திய பருத்தி கழகம், 18.12.2023 வரை 8.37 லட்சம் தொகுதி (பேல்) பருத்தியைக் கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம், பருத்தி சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் உள்ள 0.74 லட்சம் பருத்தி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
சணல் துறை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8 டிசம்பர், 2023ல் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சணல் பைகளின்(மூட்டை) பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, உணவு தானியங்களை 100% அளவிற்கும், சர்க்கரையை 20% அளவிற்கும் சணல் மூட்டைகளிலேயே அடைத்து அனுப்புவதை கட்டாயமாக்கும் விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 4 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும், 40 லட்சம் சணல் விவசாயிகளுக்கு பயனையும் அளிக்கும்.
பட்டுத் தொழில்
நாட்டில், வருடாந்திர கச்சா பட்டு உற்பத்தி, 2022-23 பருவத்தில் 36,582 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில், 7,953 மெட்ரிக் டன் கச்சா பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கம்பளித் துறை
கம்பளித்துறையின் முழுமையான வளர்ச்சிக்காக, ஒருங்கிணைந்த கம்பளி மேம்பாட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.126 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தறித் துறை
மூலப்பொருள் வினியோகத் திட்டத்தின்கீழ், போக்குவரத்து மானியம் & விலை மானியம் வாயிலாக மொத்தம் 208.903 லட்சம் கிலோ பருத்தி நூல் வினியோகிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்காக ரூ.16.42 கோடி உதவித் தொகை விடுவிக்கப்பட்டிருப்பதுடன், முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடனுதவிகள் மூலம் 3712 பயனாளிகள் பலன் அடைந்துள்ளனர்.
கைவினைத்தொழில் துறை
கைவினைத் தொழில் துறைக்கு நாட்டில் சிறந்த வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் 28.40 லட்சம் கைவினைஞர்கள் அமைச்சகத்தில் பெயர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 10.16 லட்சம் ஆண் கைவினைஞர்களும், 18.23 லட்சம் பெண் கைவினைஞர்களும் உள்ளனர். இவர்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த உள்நாட்டில் 49 நிகழ்ச்சிகளும், வெளிநாடுகளில் 13 நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
பாரத் டெக்ஸ் 2024
11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள் இணைந்து, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், பாரத் டெக்ஸ் 2024 என்ற பெயரில், வருகிற பிப்ரவரி 26-29, 2024ல் தில்லியில் மாபெரும் சர்வதேச ஜவுளித் தொழில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
**********
PKV/SK/KRS
(Release ID: 1990569)
Visitor Counter : 112