நிலக்கரி அமைச்சகம்

ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 100 கோடி டன்னைக் கடந்து விடும் - அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி

Posted On: 21 DEC 2023 1:25PM by PIB Chennai

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதால் 2025-ம் ஆண்டுக்குள் மின் துறைக்கான நிலக்கரி இறக்குமதி 2 சதவீதமாகக் குறையும் என்று மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

 

நேற்று நடைபெற்ற 9-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தின் தொடக்க விழாவில் பேசிய திரு ஜோஷி, நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்காக இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களைப் பாராட்டினார். இந்த ஆண்டு ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னைத் கடக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 

நாட்டின் நிலக்கரித் துறை உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பிற்கு தொடர்ந்து பங்களித்து வருவதாகவும், இதன் மூலம் விரைவாக வளர்ந்து வரும் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் ஊக்குவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

இந்தியா பின்பற்றி வரும் நீடித்த நிலக்கரி சுரங்க நடைமுறைகளை எடுத்துரைத்த திரு ஜோஷி, உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் நாடு உலகளாவிய முன்னோடியாக உருவெடுத்துள்ளது என்றார். நிலக்கரி வாயுமயமாக்கலுக்கு ரூ.6000 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும், நீடித்த சுரங்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் 100 மில்லியன் மரக்கன்றுகளை நட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

 

9-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தில் 26 சுரங்கங்களும், 7-வது சுற்றின் 2-வது முயற்சியின் கீழ் 5 நிலக்கரி சுரங்கங்களும் என மொத்தம் 31 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஏலம் விடப்படும் சுரங்கங்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நிலக்கரி / பழுப்பு நிலக்கரி கொண்ட மாநிலங்களில் உள்ளன.

 

இந்தியா 344.02 பில்லியன் டன் நிலக்கரி கையிருப்பைக் கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக உள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 72% மின்சாரம் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால், இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத் துறையாக மாறுகிறது.

 

வணிக ரீதியான நிலக்கரி சுரங்கம் நாட்டிற்குப் புதிய முதலீடுகளைக் கொண்டு வரும் என்றும், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழு வருவாயும் நிலக்கரி வளம் கொண்ட ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சமூக-பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும்.

 

ஏலம் விடப்பட்ட சுரங்கங்களிலிருந்து நிலக்கரி சுரங்கம் மூலம் ஆண்டுக்கு ரூ.33,343 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், மேலும் இந்த நிலக்கரி சுரங்கங்களை இயக்க மொத்தம் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும்.

***

ANU/SMB/IR/RR/KV



(Release ID: 1989178) Visitor Counter : 68