பிரதமர் நரேந்திர மோடியின் 'உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு - யாரையும் விட்டு விடக்கூடாது' என்ற தொலைநோக்குப் பார்வை குறித்து மத்தியப் பழங்குடியினர் நலன், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இன்று புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கான மத்திய அரசின் முன்முயற்சிகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
பழங்குடிப் பகுதிகளில் முழுமையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காக பி.எம்.ஜன்மன் என்ற அரசின் மிகப்பெரிய முன்முயற்சி பற்றி திரு முண்டா இந்த சந்திப்பில் தெரிவித்தார். பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் திட்டங்களால் கைவிடப்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய 75 பழங்குடி குழுக்களின் வளர்ச்சியைப் பிரதமர் ஜன்மன் இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் சுமார் ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, மேலும் 9 முக்கிய அமைச்சகங்கள் தொடர்பான 11 முக்கியமான தலையீடுகளில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். தற்போது நடைபெறும் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் உட்பட மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள் 100% சென்று சேர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், சுகாதாரத் துறையில் நாடு முன்னெப்போதும் இல்லாத புரட்சியைக் கண்டுள்ளது என்று திரு அர்ஜூன் முண்டா கூறினார். நாட்டிலேயே முதல் முறையாக, சுகாதாரம் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் உண்மையில், "ஆரோக்கியமான தேசம், பணக்கார தேசம்" என்ற பரவலான உணர்வு இப்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நாடு முழுவதும் நிறுவுவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இது இப்போது ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
2023, டிசம்பர் 18 நிலவரப்படி இவற்றின் செயல்பாட்டு விவரம் வருமாறு:
· வருகை தந்தவர்கள் எண்ணிக்கை - 227.41 கோடி
· உயர் இரத்த அழுத்த பரிசோதனை - 55.72 கோடி
· நீரிழிவு பரிசோதனை - 48.49 கோடி
· வாய் புற்றுநோய் பரிசோதனை - 32.83 கோடி
· மார்பக புற்றுநோய் பரிசோதனை - 14.92 கோடி
· கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை - 10.05 கோடி
என்பது போன்ற தகவல்களை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988650
***
(Release ID: 1988650)
ANU/PKV/SMB/ RR/KRS