ரெயில்வே அமைச்சகம்

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கினார்

Posted On: 16 DEC 2023 2:50PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்கள்,  கோட்டங்கள், ரயில்வே உற்பத்தி பிரிவுகள் மற்றும் ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (15-12-2023) 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' எனப்படும் ரயில்வே துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்கான விருதுகளை வழங்கினார். ரயில்வே ஊழியர்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்ததற்காக 21 கேடயங்களையும் அவர் வழங்கினார்.

புதுதில்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் விருதுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. ரயில்வே வாரியத் தலைவர், மண்டல ரயில்வே பொது மேலாளர்கள், ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விருதுகள் மற்றும் கேடயங்களை வழங்கிய பின்னர் உரையாற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், விருது பெற்ற அனைவரின் சிறப்பான பணிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ரயில்வேயில் மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரயில்வே அதிக மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் இப்போது பூர்த்தி செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். இது ரயில்வேயின் பொற்காலம் என்றும், இதன் பின்னணியில் உள்ள பலம் ரயில்வே ஊழியர்கள் தான் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கடி கூறுவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ரயில்வே உள்கட்டமைப்பு பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

ரயில்வே மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறும்போது செலவு குறையும் என்று அவர் குறிப்பிட்டார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ரயில்வே ஊழியர்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் திருமதி ஜெயா வர்மா சின்ஹா வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்திய ரயில்வே கடந்த சில ஆண்டுகளில் சாதித்துள்ளது என்றார்.  இது ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.     

*******


ANU/PLM/DL



(Release ID: 1987259) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu