பாதுகாப்பு அமைச்சகம்
1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றியை நினைவுகூரும் விஜய் திவாஸ் நாளில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
வீரர்களின் துணிவு, அர்ப்பணிப்பு, தியாகங்கள் மற்றும் அசைக்க முடியாத உணர்வு ஆகியவை மக்களின் இதயங்களிலும் தேசத்தின் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்: பிரதமர்
வீரமரணமடைந்த வீரர்களுக்கு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
16 DEC 2023 11:56AM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 16, 2023), 1971 போரில் இந்தியாவின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் விஜய் திவாஸை முன்னிட்டு, அந்தப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஆயுதப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தையும், ஈடு இணையற்ற தைரியத்தையும் தேசம் நன்றியுடன் நினைவில் கொள்கிறது என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியும் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தி, அவர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நினைவுகூர்ந்துள்ளார். வீரர்களின் தியாகங்கள் மக்களின் இதயங்களிலும், நாட்டின் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும், என்று பிரதமர் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆயுதப் படை வீரர்களின் அசாத்திய துணிச்சலையும் வீரத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். "நமது நாட்டை எல்லாச் சூழ்நிலைகளிலும் அச்சமின்றிப் பாதுகாக்கும் நமது ஆயுதப் படைகளை நினைத்து நாடு பெருமைப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, போர் வெற்றி தினமான விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே, விமானப்படைத் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏபி சிங் ஆகியோரும் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
*******
ANU/PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1987126)
आगंतुक पटल : 143