எரிசக்தி அமைச்சகம்
நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் கூடுதலாக 193 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது - மின் பற்றாக்குறை நிலையிலிருந்து மின் உபரி நிலைக்கு நாடு மாறியுள்ளது - மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்
Posted On:
15 DEC 2023 3:23PM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில் மின்துறை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து மின் பற்றாக்குறை நிலையிலிருந்து மின்மிகை நாடாக இந்தியா மாறியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் மரபுசாரா மின் துறையில் 97501.2 மெகாவாட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 96282.9 மெகாவாட்டும் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது. 2014 மார்ச் மாதத்தில் 248,554 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி திறன் 2023 அக்டோபரில் 425,536 மெகாவாட் என உயர்ந்து 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 187849 கிலோ மீட்டர் மின் தொடர் பாதைகளை இணைத்து, முழு நாடும் ஒரே மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 116540 மெகாவாட் மின்சாரத்தை நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு மாற்ற முடிகிறது. 1.85 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்திட்டங்களை செயல்படுத்தி, 2927 துணை மின் நிலையங்களை அமைப்பது, 3964 துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல், 8.86 லட்சம் சுற்று கிலோமீட்டர் உயரழுத்தம், தாழ்வழுத்த மின்பாதைகளை இணைத்தல் ஆகிய பணிகளின் மூலம் மின் பகிர்மான அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கிராமப்புறங்களில் 2015 ஆம் ஆண்டில் 12 மணி நேரமாக இருந்த சராசரி மின்சார விநியோக நேரம் 20.6 மணி நேரமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் சராசரி மின் விநியோக நேரம் 23.6 மணி நேரமாக அதிகரித்துள்ளது. எரிசக்தி தேவைக்கும் விநியோகிக்கப்பட்ட ஆற்றலுக்கும் இடையிலான இடைவெளி 2013-14 ஆம் ஆண்டில் 4.2 சதவீதமாக இருந்தது. இது 2023-24 ஆம் ஆண்டில் 0.3% சதவீதமாக குறைந்துள்ளது. எரிசக்தித் தேவைக்கும் விநியோகிக்கப்படும் எரிசக்திக்கும் இடையிலான இந்த இடைவெளி கூட, பொதுவாக மாநில மின் தொடரமைப்பு, பகிர்மான வலையமைப்பில் உள்ள தடைகள் மற்றும் மின் பகிர்மானக் கழகங்களின் நிதிக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.
இந்த தகவல்களை மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங், நேற்று (டிசம்பர் 14, 2023) மக்களவையில் இரண்டு தனித்தனி கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PKV/PLM/AG/KV
(Release ID: 1986745)
Visitor Counter : 87