குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
விஸ்வகுருவின் பெருமையை மீட்டெடுக்க இந்தியா தனது போக்கை வகுத்து வருகிறது: குடியரசுத் துணைத்தலைவர்
Posted On:
10 DEC 2023 5:10PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜகதீப் தன்கர், "இந்தியா அதன் விஸ்வகுருவின் பெருமையை மீட்டெடுக்க தனது பாதையை வகுத்து வருகிறது" என்று குறிப்பிட்டார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதையை உருவாக்குமாறு இளம் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.
"நம்புவோம், செயல்படுத்துவோம், ஒத்துழைப்போம், அனைத்திற்கும் மேலாக, 2047ஐ நோக்கி முன்னேறும்போது மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்க விரும்புவோம்", என்றும் அவர் கூறினார்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ - சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களில் இன்று உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், நோக்கம் மற்றும் செயல் இரண்டிலும் பொருளாதார தேசியவாதத்தைத் தழுவ மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களிடையே "சுதேசம்" எனும் உணர்வை மீண்டும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அன்னியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பது முதல் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது வரை அதன் பன்மடங்கு நன்மைகள் குறித்து அவர் விளக்கினார்.
தோல்வி பயத்தை 'வளர்ச்சிக்கு எதிரானது, முன்னேற்றத்துக்கு எதிரானது' என்று எச்சரித்த திரு தன்கர், பயத்தின் காரணமாக ஒரு கருத்தைத் தொடராமல் இருப்பது தனக்கு தானே ஒருவர் அநீதி இழைப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அநீதியை ஏற்படுத்துவதாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.
"நான்காவது தொழிற்புரட்சியின் நுழைவாயிலில்" நாம் நிற்கிறோம் என்பதை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், இயந்திர கற்றல், குவாண்டம் கம்ப்யூட்டிங், 6 ஜி தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய பல அற்புதமான தொழில்நுட்பங்களின் தோற்றத்தை எடுத்துக்கூறினார்.
இந்த கண்டுபிடிப்புகள் இணையற்ற வாய்ப்புகளை வழங்கும், தொழில்களை மறுவடிவமைக்கும், தீர்வுகளை மறுவடிவமைக்கும், மேலும் நமது வாழ்க்கை முறை மற்றும் வேலை முறையை அடிப்படையாக புரட்சிகரமாக மாற்றும் என்று அவர் வலியுறுத்தினார்.
"வெற்றி என்பது புத்தகங்களின் எடை அல்லது தரங்களின் அழுத்தத்தால் மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக கற்றல் ஆர்வம் மற்றும் சவால்களை சமாளிக்கும் மீள்திறன் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்" என்று குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எழுச்சி மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், "இந்தியாவின் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பாரத மண்டபம் மற்றும் பரந்த யசோபூமி, பிரதமர்களின் மியூசியம் போன்ற நவீன அதிசயங்களால் நிரம்பியுள்ளன" என்று பாராட்டினார்.
குடியரசுத் துணைத்தலைவர் தனது உரையின் போது, "மன அழுத்தமற்ற மனநிலை படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முழுமையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இந்த அணுகுமுறை ஒவ்வொரு மாணவரும் கல்வி ரீதியாக மட்டுமல்லாமல், வகுப்பறைக்கு அப்பால் வாழ்க்கையின் சிக்கல்களை வழிநடத்தும் பல்வேறு திறன்களைக் கொண்ட நபராகவும் வளர்வதை உறுதி செய்கிறது என்று அவர் விளக்கினார்.
ஜாம்ஷெட்பூரை 'புதுமை மற்றும் தொழில்முனைவு நகரம்' என்று வர்ணித்த திரு தன்கர், மாணவர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் ஊக்குவித்தார். "உங்கள் திறமை, திறன், உங்கள் கனவுகள் மற்றும் இலட்சியங்களை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு சூழல் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், எக்ஸ்எல்ஆர்ஐ இயக்குநர் அருட்தந்தை எஸ்.ஜார்ஜ், எக்ஸ்எல்ஆர்ஐ கல்வி நிறுவனத்தின் டீன் பேராசிரியர் சஞ்சய் பட்ரோ மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
----------
ANU/AD/BS/DL
(Release ID: 1984771)