சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மெய்நிகர் நீதிமன்றங்கள் திட்ட அமலாக்கம்

Posted On: 07 DEC 2023 4:50PM by PIB Chennai

20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30.11.2023 நிலவரப்படி, 25 மெய்நிகர் நீதிமன்றங்கள் உள்ளன. தில்லி, ஹரியானா, சண்டிகர், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், ஒடிசா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளைக் கையாள இந்த நீதிமன்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மெய்நிகர் நீதிமன்றங்களால் 4.11 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. 45 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளில், 30.11.2023 வரை ரூ.478.69 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் நீதிமன்றம் என்பது நீதிமன்றத்தில் மனுதாரர் அல்லது வழக்கறிஞர் நேரில் வருவதைத் தவிர்த்து, மெய்நிகர் தளத்தில் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடைமுறையாகும். அனைத்து நீதித்துறை செயல்முறைகளையும் பின்பற்றி, சிறிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் நீதிமன்றத்தை ஒரு மெய்நிகர் மின்னணு தளத்தின் மூலம் ஒரு நீதிபதி நிர்வகிக்க முடியும். அதன் அதிகார வரம்பு மாநிலம் முழுவதும் விரிவடைந்து 24 மணி நேரமும் செயல்படலாம். தீர்ப்பு அல்லது தீர்வுக்காக மனுதாரரோ அல்லது நீதிபதியோ நேரடியாக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. தகவல் பரிமாற்றம் மின்னணு வடிவத்தில் மட்டுமே இருக்கும். அபராதம் அல்லது இழப்பீடு செலுத்துவதும் இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். 

மெய்நிகர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் என்பது நீதித்துறை மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு நிர்வாக விவகாரமாகும்.  எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நேரடி பங்கு எதுவும் இல்லை.

இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*******

ANU/SMB/PKV/KV



(Release ID: 1983747) Visitor Counter : 60


Read this release in: English , Urdu , Hindi