மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-2027 கல்வியாண்டிற்கான அங்கீகார நடைமுறைக் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது

Posted On: 06 DEC 2023 2:30PM by PIB Chennai

2024-2027 கல்வியாண்டிற்கான ஏஐசிடிஇ அங்கீகார நடைமுறைக் கையேட்டை புதுதில்லி சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ-யின் தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீதாராம், துணைத் தலைவர் டாக்டர் அபய் ஜெர் மற்றும் உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் ராஜீவ் குமார் ஆகியோர் இன்று (06-12-2023) வெளியிட்டனர். பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ஷமீமா சித்திக் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் திரு சீதாராம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏஐசிடிஇ அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அங்கீகார நடைமுறைக் கையேட்டை வெளியிட்டுள்ளது என்றார்.  தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைப் படிப்புகளை நடத்துவதற்காக இந்தக் கவுன்சிலின் ஒப்புதலைப் பெறும்போது நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை இந்தக் கையேடு விவரிக்கிறது என்று அவர் தெரிவித்தார். கல்வியின் தரம், நடைமுறைகளில் எளிமை மற்றும் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அதன் அடிப்படையில் அங்கீகார நடைமுறைகளில் இந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் திரு சீதாராம் எடுத்துரைத்தார்.

அங்கீகார நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்:

•    சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை அனுமதியை நீடிப்பதற்கான ஏற்பாடு.

•    ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கைக்கான உச்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சேர்க்கையைக் கோருவதற்கு முன்பு நிறுவனங்கள் தரமான உள்கட்டமைப்பு மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

•    இணைப்புப் பல்கலைக்கழகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து ஆவணங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ் தொடர்பான செயல்பாடுகளைக் குறைத்தல்.

•    தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இளங்கலை படிப்புகளான பி.சி.ஏ போன்றவையும் மேலாண்மைப் படிப்புகளான பி.பி.ஏ போன்றவையும் ஏஐசிடிஇ-யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

•    திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இணையவழிக் கற்றல் போன்றவற்றுக்கான ஒப்புதல் செயல்முறை குறித்த கூடுதல் தெளிவு தரப்பட்டுள்ளது.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு தொழில்நுட்ப மையமாக மாற்ற நாட்டில் முழுமையான, தரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்க ஏஐசிடிஇ உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.

***

(Release ID: 1983013)

ANU/SMB/PLM/KRS


(Release ID: 1983244) Visitor Counter : 107