மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
azadi ka amrit mahotsav

வங்கக் கடலில் உருவாகவுள்ள 'மிச்சாங்' புயல் முன்னேற்பாடுகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு செய்தது

Posted On: 01 DEC 2023 6:13PM by PIB Chennai

வங்கக்கடலில் உருவாகவிருக்கும் 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு (என்.சி.எம்.சி) இன்று (01.12.2023) கூடியது.

'மிச்சாங்' புயல் தொடர்பான தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர், குழுவிடம் விளக்கினார். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணிக்கு அதே பகுதியில்  புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. .

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 2-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும்.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், புதுச்சேரியின் நிதித் துறைச் செயலாளர் ஆகியோர்  இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். புயல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து அவர்கள் மேலாண்மைக் குழுவிடம் விளக்கினர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போதுமான தங்குமிடங்கள், மருந்துகள் மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் செல்ல தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய முகமைகள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளின் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சரவைச் செயலாளர், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்கவும் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமாறு அவர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார்.

கடலில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.  தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர், புதுச்சேரி நிதித்துறை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், மீன்வளத்துறை செயலாளர், மின்துறை செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

*********


(Release ID: 1981738) Visitor Counter : 138