ஆயுஷ்
ஆயுஷ் துறையில் தொழில்முனைவை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: ஆயுஷ் அமைச்சர் திரு சரபானந்த சோனாவால்
Posted On:
01 DEC 2023 5:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ், உலக அரங்கில் ஆயுர்வேதத்தின் வலிமை வெளிப்படுத்தப்படுவதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் உலக ஆயுர்வேத விழாவின் ஒரு பகுதியாக தேசிய ஆரோக்கிய கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். இந்த விழா இன்று (01.12.2023) முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பிரமுகர்கள் மற்றும் ஆயுர்வேத வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு வி.முரளிதரன், ஆயுஷ் துறை செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனாவால் பழங்கால ஞானத்திற்கும், நவீன முன்னேற்றங்களுக்கும் ஏற்ற வகையில் ஆயுர்வேத சிகிச்சை நடைமுறைகளை அமைக்குமாறு வல்லுநர்களை கேட்டுக்கொண்டார். ஆயுஷ் துறையில் பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். ஆயுஷ் துறையில் தொழில்முனைவை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.
ஆயுஷ் துறையில் இளம் தொழில்முனைவோர் புத்தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு வி முரளிதரன், அதிகரித்து வரும் சுகாதார சவால்களை சமாளிக்க இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள், குறிப்பாக ஆயுர்வேதம் சிறந்த தீர்வாக அமையும் என்றார்.
ANU/AD/PLM/RS/KRS
(Release ID: 1981599)
***
(Release ID: 1981666)
Visitor Counter : 83