தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை நோக்கிய பயணத்தின் நகர்ப்புற இயக்கம் தில்லியில் தொடங்கியது
Posted On:
28 NOV 2023 6:23PM by PIB Chennai
மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களின் பயன்களை அடைவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை நோக்கிய பயண இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் கஜூரி சவுக்கில் நடைபெற்ற இதற்கான பிரச்சார வேன்கள் சேவையை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 5 ஐ.இ.சி (தகவல், கல்வி, தகவல் தொடர்பு) வேன்கள் டெல்லியின் 11 மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் பயணிக்கும். பிரதமரின் சாலையோர வியாபாரிகள் நலத்திட்டம், முத்ரா கடன்கள், ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் பேமெண்ட், பிரதமரின் மின்சார பேருந்து சேவை, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம் போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை, நகர்ப்புற பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் "வளர்ந்த இந்தியா" என்ற கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை நோக்கியப் பயண இயக்கம் உள்ளது என்று தெரிவித்தார். குறிப்பாக தூய்மை, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். இந்த திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதிக எண்ணிக்கையிலான மக்களை, குறிப்பாக நலிவடைந்த பிரிவினரை இந்த திட்டங்களின் வரம்பிற்குள் கொண்டு வருவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று திரு சக்சேனா கூறினார்.
தொடக்க நிகழ்வின் போது, துணைநிலை ஆளுநர் அனைத்து பிரமுகர்கள், மக்களுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை நோக்கிய பயணம் என்ற உறுதிமொழி எடுக்கவைத்தார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தில்லியின் பல்வேறு இடங்களில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்ட முகாம், சுகாதார முகாம், ஆயுஷ்மான் அட்டை முகாம், ஆதார் புதுப்பிப்பு முகாம், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் முகாம் போன்ற சேவைகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.
***
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1980527)
Visitor Counter : 106