விண்வெளித்துறை
இஸ்ரோவுடன் இணைந்து செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் நாசா தலைவர் ஆலோசனை
Posted On:
28 NOV 2023 4:53PM by PIB Chennai
நாசா-இஸ்ரோ கூட்டு தயாரிப்பான நிசார் என்று பெயரிடப்பட்டுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்தியாவும், அமெரிக்காவும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் செலுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நிசார் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலச் சூழல் மண்டலங்கள், மலை, கடல் பனிப்பாறை, பெருங்கடல்கள் ஆகியவற்றை பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஆய்வு செய்ய நிசாரின் தரவு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இஸ்ரோவின் எஸ்-பேண்ட் எஸ்ஏஆர் ஜேபிஎல் / நாசாவில் நாசாவின் எல்-பேண்ட் எஸ்ஏஆர் உடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைந்த எல் & எஸ் பேண்ட் எஸ்ஏஆர் தற்போது நாசா / ஜேபிஎல் அதிகாரிகளின் பங்களிப்புடன் பெங்களூரில் உள்ள யுஆர்எஸ்சியில் செயற்கைக்கோளுடன் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்காவின் நாசா தலைமை நிர்வாகி திரு பில் நெல்சன் இன்று புதுதில்லியில் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் விண்வெளித் துறையில் புத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக கூறினார். வெறும் நான்கு ஆண்டுகளுக்குள், விண்வெளி துறையில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து 150 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, முந்தைய சில நிறுவனங்கள் லாபகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டில் 'கொலம்பியா'வில் 24 வது விண்வெளி விண்கலத்தின் குழுவினருடன் பறந்த விண்வெளி வீரரான நெல்சன், அமெரிக்காவின் 231 செயற்கைக்கோள்களைத் துருவச் செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தில் (பி.எஸ்.எல்.வி) செலுத்தியதற்காக இஸ்ரோவைப் பாராட்டினார்.
இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை நாளை பெங்களூருவில் சந்திக்க ஆவலாக இருப்பதாக நெல்சன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
***
ANU/PKV/IR/AG/KPG
(Release ID: 1980476)
Visitor Counter : 151