அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய வீட்டுவசதி தொழில்நுட்பங்கள் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் கட்டடவியலை கம்பீரமாக மாற்றும்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
24 NOV 2023 2:37PM by PIB Chennai
இந்தியா தனது 100 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, 2047-ம் ஆண்டில், புதிய வீட்டுவசதி தொழில்நுட்பங்கள் நாட்டின் கட்டடவியலைக் கம்பீரமானதாக மாற்றும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று (24.11.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிலக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்-ன் கீழ் ரூர்க்கியில் இயங்கும் மத்திய கட்டடவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்பப் பரிமாற்ற விழாவில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த மற்றும் அதிநவீன கட்டிட கட்டுமான தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது என்றார். அவை உலகளாவிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்திற்கு தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனம் என்ற அடிப்படையில், ரூர்க்கியில் உள்ள சி.பி.ஆர்.ஐ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கட்டுமான தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றுவதற்கும், நிலைத்தன்மையை அதிகரிப்பதற்கும், மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பங்காற்றுவதாக அவர் கூறினார்.
வீட்டுவசதித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை வழங்கும் இலக்கை நோக்கி இந்தியா செல்வதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துத் தொழில்துறை பிரதிநிதிகளும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, நாட்டில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித்துறைச் செயலாளரும், சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பின் தலைமை இயக்குநருமான திருமதி என்.கலைச்செல்வி பேசுகையில், கடந்த 77 ஆண்டுகளில் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம், ரூர்க்கியில் உள்ள நிறுவனம் வீட்டுவசதி தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றார். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கட்டுமானத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையிலும், சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சிறந்த, நிலையான மற்றும் செலவு குறைந்த கட்டட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வழிகாட்டி கையேட்டை டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
***
ANU/SMB/PLM/RS/KPG
(Release ID: 1979471)
Visitor Counter : 95