இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளை திரு அனுராக் சிங் தாக்கூர் அறிவித்தார்

Posted On: 23 NOV 2023 6:12PM by PIB Chennai

திறமைகளை அடையாளம் காணவும், இளம் மற்றும் ஆர்வமுள்ள பாரா விளையாட்டு வீரர்களுக்கு பிரகாசமான வாய்ப்பை உருவாக்கவும் இந்தியாவில் முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டி புதுதில்லியில் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், "டிசம்பர் 10 முதல் 17 வரை, முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் புது தில்லியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகிறேன் என்று கூறினார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூன்று மைதானங்களில் மொத்தம் 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2018 முதல் மொத்தம் 11 கேலோ இந்தியா விளையாட்டுகள் நடத்தப்பட்டன - 5 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள், 3 கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் மற்றும் 3 கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 "இந்த விளையாட்டுகளிலிருந்து, சுமார் 1000 திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் பலர் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பாரா தடகள வீரர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

பாரா தடகளம், பாரா துப்பாக்கிச் சுடுதல், பாரா வில்வித்தை, பாரா கால்பந்து, பாரா பேட்மிண்டன், பாரா டேபிள் டென்னிஸ் மற்றும் பாரா பளு தூக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் பாரா தடகள வீரர்கள் பங்கேற்கும் முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1350 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

----------

ANU/AD/IR/RS/KRS

(Release ID: 1979169)



(Release ID: 1979242) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia