குடியரசுத் தலைவர் செயலகம்
குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்
Posted On:
20 NOV 2023 4:19PM by PIB Chennai
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2023, நவம்பர் 20 ) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், சிறுவயதில் தனது வீட்டிற்கு அருகில் பாடசாலை இல்லை; அதனால் தான் படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அருகில் பள்ளி இல்லாததால் பல குழந்தைகள் அந்த நேரத்தில் கல்வியை இழந்தனர். அப்போதையச் சூழல் இப்போது இல்லை என்று அவர் கூறினார். ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைத் திறப்பதன் மூலம், உள்ளூர் குழந்தைகளுக்கு இப்போது கல்விக்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்விற்கான திறவுகோல் கல்வி என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
குழந்தைகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், தானும் அவர்களைப் போன்ற எளிய பின்னணியிலிருந்து வந்தவர் என்று கூறினார். தனது கல்வியின் காரணமாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும், . கல்வி, கற்பவர்களை வெற்றி பெறச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். படித்தவர்கள் தங்கள் வளர்ச்சியுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பன்முகத் திட்டங்களை தொடங்கியுள்ளது. பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும் என்றும், சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்றும் குடியரசுதலைவர் கூறினார்.
***
ANU/SMB/BS/RS/KPG
(Release ID: 1978273)
Visitor Counter : 110