மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, உலகளாவிய மீன்வள இந்திய மாநாடு 2023 ஐ செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார்

Posted On: 19 NOV 2023 2:43PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, அகமதாபாதில் உள்ள குஜராத் அறிவியல் நகரில் உலகளாவிய மீன்வள இந்தியா மாநாடு 2023 என்ற இரண்டு நாள் பெரு நிகழ்வை செவ்வாயன்று தொடங்கி வைக்கிறார்.

'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளத்தைக் கொண்டாடுதல்' என்ற கருப்பொருளின் கீழ், பயனுள்ள விவாதங்கள், சந்தை நுண்ணறிவுகள், கட்டமைப்பு ஆகியவற்ருடன் தொடர்புடைய முக்கிய பங்கேற்பாளர்களை ஒரே மேடையில் ஒன்றிணைப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்களான  டாக்டர் எல்.முருகன், டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் 10 நாடுகளைச் சேர்ந்த உயர்நிலைப் பிரதிநிதிகள் , சர்வதேச அமைப்புகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள், மற்ற பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

குஜராத் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பசு வளர்ப்புத் துறை அமைச்சர் திரு. ராகவ்ஜிபாய் படேல், மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இந்திய தலைவர் தகாயுகி ஹகிவாரா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மீன்வளத்துறை இணைச் செயலாளர்கள் திரு. சாகர்மெஹ்ரா, திருமதி நீது குமாரி ஆகியோர் வரவேற்புரையும்  நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.

குஜராத் மாநில மீன்வளத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, 'உள்நாட்டு நீர்த்தேக்க குத்தகைக் கொள்கை' ஆவணம் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொடக்க அமர்வில் குஜராத் மாநில மீன்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இடம்பெறும்; குழு விபத்துக் காப்பீட்டுத் திட்ட உரிமைகோரலுக்கான காசோலைகள், கிசான் கடன் அட்டைகள், கப்பல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்புக்கான டிரான்ஸ்பாண்டர்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

'இந்தியாவின் மாநில மீன்கள்' என்ற கையேடு, மீன்வளப் புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு ஆகியவை வெளியிடப்பட உள்ளன.. உலக மீன்வள தினத்தை முன்னிட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா , தலைமையில் நடைபெற உள்ள சர்வதேச வட்டமேசை  மாநாடு இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.  பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும்  உயர்நிலைக் கலந்துரையாடல், பருவநிலை நெருக்கடி உள்ளிட்ட பல முக்கியமான சவால்களுக்கு மத்தியில் இத்துறையைத் தக்கவைப்பதற்கான சர்வதேச கூட்டு முயற்சிகளில் கவனம் செலுத்தப்படும். 

பிரான்ஸ் விவசாய விவகாரங்களுக்கான ஆலோசகர் மோனிக் டிரான்; நார்வேயைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரோட்ரிகோ வால்டஸ் கார்ட்டர் மற்றும் ஆர்த்தி பாட்டியா குமார், ஆஸ்திரேலிய தூதகரத்தின்  முதல் செயலாளர் (விவசாயம் )டாக்டர் ரிச்சர்ட் நியால், ரஷ்யாவைச் சேர்ந்த முராடோவ் செர்ஜி,  அடியாட்டுலின் இலியாஸ் மற்றும் ஷாகுஷினா அன்னா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் , பிரேசில் தூதரகத்தின் வர்த்தக மேம்பாட்டுத் துறைத் தலைவர்,வாக்னர் ஆன்டியூன்ஸ், கிரேக்க அமைச்சரும் தூதருமான திரு.டிமிட்ரியோஸ் ஐயோன்னோ, ஸ்பெயின் ஆலோசகர் போர்ஜா வெலாஸ்கோ துடுரி, ; நியூசிலாந்து வேளாண் ஆலோசகர் மெலனி பிலிப்ஸ், மற்றும் ஜிம்பாப்வே துணை தூதர் பீட்டர் ஹோப்வானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சுமார் 50 இந்திய தூதரகங்களும் மெய்நிகர் முறையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி , ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , ஜி.ஐ.இசட், வங்காள விரிகுடா அரசுகளுக்கு இடையிலான திட்டம், மற்றும் மரைன் ஸ்டீவர்ட்ஷிப் கவுன்சில்  உள்ளிட்ட சுமார் 10 புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளும் இந்த உலகளாவிய மாநாட்டில் பங்கேற்கின்றன.

இந்த மாநாட்டில் மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், உலக மீன்வள விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், மீன்வள சமூகங்கள் மற்றும் முதலீட்டு வங்கியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் ஸ்டார்ட் அப்கள், ஏற்றுமதியாளர்கள், மீன்வள சங்கங்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்கள் உட்பட 210 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள், தொழில்நுட்பம், வெற்றிக் கதைகள் மற்றும் புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்தும். இதன் மூலம் தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறு நடுத்தர மீன்வளத் தொழில் நிறுவனங்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து மீன்வளத் துறையில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த ஒரு தனித்துவ வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்வில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களைக் கொண்ட மத்ஸ்யமந்தன் உள்ளிட்ட தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற உள்ளன.

அதிநவீன மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியில் மீன்வளத் துறையின் மாற்றத்துக்கான 10 முயற்சிகளை பிரத்யேகமாக காட்சிப்படுத்த சிறப்பு அரங்கம் அமைக்கப்படும்.

 

இந்த மாநாட்டில் மீனவர்கள், மீன் வளர்ப்போர், மீன் விற்பனையாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் மீன்வள கூட்டுறவு மற்றும் மீன்வள ஸ்டார்ட்அப்களின் பிரதிநிதிகள், சர்வதேச தலைவர்கள், தொழில்நுட்ப முதலீட்டாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஏற்றுமதி கவுன்சில்கள், மீன்வள சங்கங்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச மீன்பிடி தொழில் நிறுவனங்கள் மற்றும் நீர்வாழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்து நிறுவனங்கள் உள்ளிட்ட 5,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.  இரண்டு நாள் பெரும் நிகழ்விலும்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் பங்கேற்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

ANU/SMB/BS/DL



(Release ID: 1978022) Visitor Counter : 105