மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா நவம்பர் 21-ம் தேதி அகமதாபாத்தில் உலக மீன்வள மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்
Posted On:
18 NOV 2023 6:46PM by PIB Chennai
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அகமதாபாத்தில் 21-11-2023 செவ்வாய்க்கிழமையன்று “உலக மீன்வள மாநாடு இந்தியா 2023” என்ற தலைப்பிலான மீன்வளம் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன், டாக்டர் சஞ்சீவ் கே பால்யன், மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்கள், மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாநில மீன்வள அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், உலகளாவிய மீன்வள விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், மீனவ சமூகத்தினர், முதலீட்டு வங்கியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் இரண்டு நாள் நிகழ்வாக இந்த “உலக மீன்வள மாநாடு இந்தியா-2023” அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை மத்திய மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது இத்துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் துறை சார்ந்த ஒத்துழைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கும், நாட்டின் மீன்வளத் துறையில் நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கும் ஒரு தளமாக செயல்படும். 'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளத்தை கொண்டாடுதல்' என்ற கருப்பொருளின் கீழ், பயனுள்ள விவாதங்கள் நடைபெறவுள்ளது.
மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் நடைபெறவுள்ள சர்வதேச வட்டமேசைக் கூட்டம் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகும். பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், பல முக்கியமான சவால்களை எதிர்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இதுதவிர மேலும் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் புத்தொழில் நிறுதனத்தினர், ஏற்றுமதியாளர்கள், மீன்வள சங்கத்தினர் மற்றும் பதப்படுத்தும் தொழில்துறையினர் உள்பட 210 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இது அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமையும்.
இந்த நிகழ்வுக்கு மீனவர்கள், மீன் வளர்ப்போர், மீன் விற்பனையாளர்கள், மீன்வள கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளூர் சமூகங்களின் பிரதிநிதிகள் என மொத்தம் 5,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
ANU/AD/PLM/DL
(Release ID: 1977905)
Visitor Counter : 395