கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

பிரதமரின் கடல்சார் அமிர்தகால தொலைநோக்குத் திட்டத்தின் வெற்றியின் மூலம் உலகளாவிய கடல்சார் செயல்பாடுகளை வழிநடத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

Posted On: 17 NOV 2023 6:26PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள்  மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில் இன்று (17.11.2023) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய கடல்சார் தலைமையிடமாக மாற்றுவதற்கான  திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சகத்தின் முக்கியத் திட்டமான சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள்  குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு டிரில்லியன் ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் 162 திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை  இணையமைச்சர்கள் திரு ஸ்ரீபாத் நாயக் மற்றும்  திரு சாந்தனு தாக்கூர் ஆகியோரும்  பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் கப்பல்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கடல்சார் துறையில் உலகளாவிய தலைமை இடமாக மாறும் மிக முக்கிய  கட்டத்தில் இந்தியா உள்ளது என்று கூறினார்.  பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடல்சார் அமிர்தகாலத் தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். கடல்சார் துறையில் இந்தியாவை உலகளாவிய மிகப்பெரிய சக்தியாக மாற்றுவதற்கான நோக்கத்துடன், துறைமுகங்களை மேம்படுத்துதல், கப்பல் துறைக்கு அதிகாரமளித்தல் மற்றும் நீர்வழிகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.   உலகின் முதல் 25 துறைமுகங்களில், நமது துறைமுகங்களை இடம் பெறச் செய்ய கப்பல் துறை அமைச்சகம் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் கடல்சார் துறையில் இந்தியா உலகளாவிய தலைமைத்துவ நாடாக வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

***

(Release ID: 1977706)

ANU/PKV/PLM/AG/KRS



(Release ID: 1977721) Visitor Counter : 80