வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பேச்சு நடத்தினார்
Posted On:
16 NOV 2023 1:26PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தமது அமெரிக்கப் பயணத்தின் மூன்றாவது நாளில் சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் (வி.சி) கலந்துரையாடினார். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாற்றுவதற்கான யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்திய புத்தொழில் சூழல் அமைப்பு குறித்த தமது கருத்துகளையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரியும் இந்தியாவின் இளம் திறமையாளர்களுக்கு உதவி அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று அங்குள்ள தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் சந்திப்பு வட்டமேஜை விவாதத்தில் பங்கேற்றார். அதில் ஸ்டான்போர்டு, யுசி பெர்க்லி, ஃப்ரெஸ்னோ, யுசி சான்டா குரூஸ், யுசி டேவிஸ் மற்றும் சிலிக்கான் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். ஸ்டான்போர்டு போன்ற நிறுவனங்களுடன் இந்திய கல்வி நிறுவனங்கள் எவ்வாறு கூட்டு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா - ஐ.சி.ஏ.ஐ) சான்பிரான்சிஸ்கோ கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஐ.சி.ஏ.ஐ உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது. இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் பட்டயக் கணக்காளர்களின் பங்கை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார்.
பின்னர் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மைக்ரான் டெக்னாலஜி தலைமைச் செயல் அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா, யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி திரு நீல் மோகன் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.
பின்னர், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற மற்றும் நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
******
ANU/PKV/PLM/RS/KV
(Release ID: 1977365)
Visitor Counter : 108