வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையின் கீழ் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 15 NOV 2023 11:45AM by PIB Chennai

இந்தியா-அமெரிக்க வர்த்தக உரையாடல் கட்டமைப்பின் கீழ் "புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பின் மூலம் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்துதல்" தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 நவம்பர் 14 அன்று சான் பிரான்சிஸ்கோவில் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தானது. ஜூன் 2023 -ல் பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டு அறிக்கையில் "புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு" தொடர்பான கட்டமைப்பு நிறுவப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற "புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு வகைப்படுத்துதல் அமெரிக்கா - இந்தியா தொழில்முனைவோர் கூட்டு செயல்பாடு" என்ற தலைப்பிலான தொழில் வட்டமேஜை மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காம் மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா ஆதரவுடன், முக்கிய தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், முக்கிய மூலதன நிறுவனங்களின் நிர்வாகிகள்

உள்ளிட்டோர் பங்கேற்று அமெரிக்க-இந்தியா தொழில்நுட்ப ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விவாதித்தனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்பத் துறைகளில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவு, கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். இது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.  

வர்த்தக பேச்சுவார்த்தை என்பது, வணிகப் பிரிவினருக்கு இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழக்கமான கலந்துரையாடலை எளிதாக்குவதற்காகவும், வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்குமான அமைச்சகங்கள் நிலையிலான ஒரு கட்டமைப்பாகும்.

5-வது இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை, 2023 மார்ச் 8 முதல் 10 வரை அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோவின் இந்தியப் பயணத்தின் போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், விநியோகச் சங்கிலி, பருவநிலை மற்றும் பசுமைத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக  விவாதிக்கப்பட்டது.

***

ANU/PKV/PLM/RS/KPG



(Release ID: 1977045) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Marathi , Hindi