குடியரசுத் தலைவர் செயலகம்
குழந்தைகள் தினத்தன்று பல்வேறு பள்ளிகள், அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்
Posted On:
14 NOV 2023 6:24PM by PIB Chennai
குழந்தைகள் தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகள், அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் இன்று (நவம்பர் 14, 2023) குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
அப்போது உரையாற்றிய குடியரசுத்தலைவர், சிறுவர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என நாம் அடிக்கடி கூறுவதாகவும், இந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதும், அதன் சரியான வளர்ச்சியை உறுதி செய்வதும் நம் அனைவரின் கடமையாகும் என்று தெரிவித்தார். இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பம், நிறைய தகவல்கள் மற்றும் அறிவு சார்ந்தவர்களாக உள்ளனர் என்று அவர் கூறினார். அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், நமது குழந்தைகளின் திறமைக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவது நம் அனைவரது கடமை என்று அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் மற்றவர்களிடம் அதிக உணர்திறன் கொண்டவர்கள் என்று குடியரசுத்தலைவர் கூறினார். மற்றவர்களின் கவலையைப் பார்த்து வருத்தப்படுவார்கள் என்றும், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளின் இந்த குணத்தின் காரணமாக, மற்றவர்களுக்கு உதவவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை உணர்வைக் கொண்டிருக்கவும், குழந்தை பருவத்திலிருந்தே அவர்களை ஊக்குவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் தூய்மை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
குழந்தைகளின் திறனை உணர்ந்து முழு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் இலக்கை நோக்கி முன்னேறினால், அவர்கள் நிச்சயமாக தங்கள் இலக்கை அடைய முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்திய குடியரசுத்தலைவர், புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்று ஒரு பழமொழி உள்ளது என்று சுட்டிக்காட்டினார். நல்ல புத்தகங்கள் ஒருவரின் ஆளுமையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்குமாறு அவர் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். இது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் சவால்களை எதிர்கொள்ள உதவும் என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
******
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1976985)
Visitor Counter : 105