பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண் படைவீரர்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்

Posted On: 05 NOV 2023 10:04AM by PIB Chennai

ஆயுதப்படைகளில் உள்ள பெண் வீரர்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்குதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்புப் படைகளில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஒருவர் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், இத்தகைய விடுப்புகள் சம அளவில் கிடைக்கும்.

ஆயுதப்படைகளில் அனைத்து பெண்களுக்கும், அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு என்ற பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுப்பு விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக விரிவுபடுத்துவது என்பது, ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்குப் பயனளிக்கும். இந்த நடவடிக்கை ராணுவத்தில் பெண்களின் பணிச் சூழலை மேம்படுத்துவதோடு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும்.

பெண் சக்திக்கு அதிகாரம் அளிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், முப்படைகளும் பெண்களைச் சேர்ப்பதன் மூலம் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண் அக்னி வீர்களை நியமிப்பதன் மூலம், நாட்டின் நிலம், கடல் மற்றும் வான் எல்லைகளைப் பாதுகாப்பதில் பெண்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தி ஆகியவை ஆயுதப்படைகளுக்குக் கிடைக்கும்.

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது, போர்க்கப்பல்களில் பணியமர்த்தப்படுவது மற்றும் விமானப் படைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவது என இந்தியப் பெண்கள் இப்போது ஆயுதப்படைகளில் அனைத்துத் துறைகளிலும்  தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். 2019-ம் ஆண்டில், இந்திய ராணுவத்தில் பெண்களை ராணுவக் காவல் படையில் வீரர்களாக நியமித்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது.

****  

PKV/PLM/DL


(Release ID: 1974807) Visitor Counter : 145