வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், தொலைதூரப் பகுதிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கும், எதிர்காலத்திற்கான தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படும்; மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
04 NOV 2023 7:41PM by PIB Chennai
வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், தொலைதூர பகுதிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், எதிர்காலத்திற்குத் தேவையான தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஸ்லஷ் – டி எனப்படும் புத்தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவை ஏற்று அதனடிப்படையில் செயல்படுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய நிலையில் இந்தியாவின் பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார். சர்வதேச புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியாவின் வளர்ச்சியையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பலம் அதன் பெரிய இளைஞர் எண்ணிக்கை என்று அவர் கூறினார்.
இந்திய புத்தொழில் நிறுவனங்கள் லட்சியத்துடன் செயல்பட்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வெளிப்படையான விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவத்தை திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார். இந்த மனப்பான்மையும், முன்னேற்றத்திற்கான தொடர்ச்சியான தேடலும் இந்தியாவின் புத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் சிந்தனைக்கு ஊக்கமூட்டி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பல புத்தொழில் நிறுவனங்கள் சவால்கள் மற்றும் தோல்விகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யும் அவர்களின் மீள்திறன் மற்றும் உறுதியை அவர் பாராட்டினார். மாற்றத்துக்கான இந்திய இளைஞர்களின் சக்தி நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் தொடர்ந்து பெரிய, துணிச்சலான இலக்குகளுடன் செயல்பட்டால், இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பு உலகின் மிகப்பெரியதாக மாறும் என்று திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவும், புத்தாக்கக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டினார்.
****
AD/PLM/DL
(Release ID: 1974773)
Visitor Counter : 110