பாதுகாப்பு அமைச்சகம்
'இந்தியா உற்பத்திக் கண்காட்சி'யைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் தொடங்கி வைத்தார்
Posted On:
02 NOV 2023 3:58PM by PIB Chennai
கர்நாடகாவின் பெங்களூரில் மூன்று நாள் 'இந்தியா உற்பத்தி கண்காட்சியை' பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023, நவம்பர் 02 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை லகு உத்யோக் பாரதி & ஐஎம்எஸ் அறக்கட்டளை, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 'இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி' என்பது இந்தக் கண்காட்சியின் மையப்பொருளாகும்.
தொடக்க விழாவில் கலந்து கொண்ட தொழில்துறை தலைவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறுதொழில்கள் என்றார். இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருப்பது சிறுதொழில்கள்தான்; மோட்டார் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ, அந்த அளவுக்கு பொருளாதார வாகனம் வேகமாக நகரும் என்று கூறிய அவர், பொருளாதாரத்தில் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் சிறு தொழில்களைப் பாராட்டினார்.
நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தொழில்களின் முக்கிய பங்களிப்பை திரு. ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். "செய்யப்படும் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, பெரிய தொழில்களை விட சிறிய தொழில்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அவை சமூகத்தில் செல்வத்தை இன்னும் சமமாகப் பரப்புவதையும் உறுதி செய்கின்றன. பல எம்.எஸ்.எம்.இ.க்கள் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படுகின்றன. மேலும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் உலகளாவிய விநியோகத் தொடரின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியில் கனரக தொழில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன, ஆனால் சிறு தொழில்களைப் புறக்கணிப்பதன் மூலம் நாடு முழுமையாக முன்னேற முடியாது" என்று அவர் கூறினார்.
"பண்டைய காலத்தில், இந்தியாவில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லை. சிறு தொழில்கள் மட்டுமே. ஜவுளி, இரும்பு, கப்பல் கட்டுமானம் ஆகிய மூன்று தொழில்களுக்கும் இந்தியா உலகம் முழுவதும் அறியப்பட்டது. அவர்கள் நமது தொழில்துறை திறனை வெளிப்படுத்தினர் "என்று அவர் கூறினார்.
பெரிய தொழிற்சாலைகளை விட சிறு தொழில்கள் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் திறனை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார். "சிறு தொழில்களின் தகவமைப்புதான் புதுமைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பல நேரங்களில், புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வணிக மாதிரிகளின் அடிப்படையில் பெரிய தொழில்களை விட சிறிய தொழில்கள் அதிக புதுமைகளைக் கொண்டு வருகின்றன, "என்று அவர் கூறினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொருளாதாரம் குறித்த தத்துவத்தை நினைவு கூர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர், கனரகத் தொழில்களை விட சிறு தொழில்களில் கவனம் செலுத்த அவர் ஊக்குவித்தார். உள்ளூர் சமூகங்களுடன் சிறு தொழில்களின் வலுவான தொடர்புகளே இதற்குக் காரணம். அவற்றின் உற்பத்தி அளவு சிறியதாக இருந்தாலும், அவை உள்ளூர் தேவைகளுக்கு சிறப்பாகப் பொருந்துகின்றன என்று அவர் கூறினார்.
தனியார் தொழில்கள் சுயநல நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று நம்பும் ஒரு பிரிவினரின் கருத்து பற்றிக் குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர், "பொருளாதாரம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது; சுயநல நோக்கத்திற்கும் லாப நோக்கத்திற்கும் இடையே சிறிய கோடு உள்ளது. தனியார் தொழிற்சாலைகளின் லாபம் இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களைச் சென்றடைகிறது, இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் இயங்குகிறது. தனியார் தொழிற்சாலைகள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை என்றால், அவர்களால் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க முடியாது.'லாபம் சுயநலம் அல்ல, அது நியாயமான பயன்' என்றார்.
லகு உத்யோக் பாரதியை அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான பாலம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். "ஒரு நிறுவனமாக, லகு உத்யோக் பாரதி சிறு தொழில்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விரைவில் தீர்வு காண்போம். இதில் இன்னொரு முக்கியமான பங்கும் உண்டு. அரசும், சமூகமும் தொழில்துறையினர் மீது சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் உயர் தரமான மற்றும் செலவு குறைந்த தயாரிப்புகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, சுத்தமான தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்'' என்று .அவர் கேட்டுக்கொண்டார்.
லகு உத்யோக் பாரதி மூலம் நாட்டின் சிறு தொழில்கள் சிறப்பாக முன்னேறி வருவதை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் தொழில்கள் தொடர்ந்து முன்னேறினால், வரும் காலங்களில் இந்தியா தன்னிறைவு பெறுவதோடு உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆறாவது 'இந்தியா உற்பத்தி கண்காட்சி' விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பொறியியல், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உபகரணங்கள் ஆகியவற்றைப் பங்கேற்பாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் தளத்தையும் வணிக மற்றும் அறிவுப் பகிர்வு வாய்ப்புகளையும் வழங்கும். சிறந்த சிந்தனைகள், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
*******
ANU/PKV/SMB/KRS
(Release ID: 1974126)
(Release ID: 1974181)
Visitor Counter : 143