மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இங்கிலாந்தில் நடைபெறும் "செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு உச்சி மாநாடு 2023"-ல் மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்கிறார்
Posted On:
31 OCT 2023 4:30PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், 2023 நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் நடைபெற உள்ள "செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு உச்சிமாநாடு 2023"-ல் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, கென்யா, சவுதி அரேபியா, நெதர்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் முன்னணி உலகளாவிய சிந்தனைக் குழுக்கள், செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் திரு ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்தும் இந்தியாவின் அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து அவர் உரையாற்றுவார். அதே நேரத்தில் குறைபாடுகளைத் திறம்பட நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் அபாயங்களைக் குறைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துவார்,
உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில், ஒத்த கருத்துடைய நாடுகளிடையே செயற்கை நுண்ணறிவுக்கான கூட்டு கட்டமைப்பை நிறுவுவது தொடர்பான விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களிலும் திரு ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்பார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சக அமைச்சர்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடுவார்.
*****
AD/PLM/KRS
(Release ID: 1973511)
Visitor Counter : 127