சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் குழுவின் அமைச்சர்கள் நிலையிலான 76 வது வட்டமேசை மாநாட்டில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார்

Posted On: 31 OCT 2023 3:17PM by PIB Chennai

"ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் முதலீடு செய்வது  உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கான சிறந்த  மற்றும் செலவு குறைந்த வழியாகும் என மத்திய சுகாதரத் துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் குழுவின் அமைச்சர்கள் நிலையிலான 76 வது வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதில் முக்கிய அம்சமாக, தரமான சிகிச்சை கிடைப்பதில் யாரும் விடுபடக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகக் கூறினார். 

 

இந்தியாவின் வலுவான சுகாதார அமைப்பு "முழு அரசு" மற்றும் "முழு சமூகம்" என்ற அணுகுமுறையைச் சார்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். 1.61 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதாக அவர் கூறினார். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வயதினருக்கும் தொடர்ச்சியான பராமரிப்பு அணுகுமுறை மூலம் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

 

ஆரம்ப சுகாதாரத்திற்காக கொள்கை சீர்திருத்தங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறிய அவர்,  இந்தியாவின் ஆஷா திட்டம் உலக அளவில் மிகப்பெரிய சமூக சுகாதாரப் பணியாளர் திட்டமாகும் என்று தெரிவித்தார். அனைத்து நிலைகளிலும் அத்தியாவசியமான, தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றை ஒருங்கிணைக்க இந்தியப் பொது சுகாதாரத் தரநிலைகள் 2022 ஆம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து பேசிய திருமதி பாரதி பிரவீன் பவார், ஆயுஷ்மான் பாரத் நலவாழ்வு மையங்கள், இப்போது மனநலம், முதியோர் பராமரிப்பு, நோய்த்தடுப்பு பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட பிரிவுகளில் தற்போதுள்ள இடைவெளிகளை  சரி செய்ய பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (ஏபிடிஎம்) ஒரு விரிவான டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.           

இந்நிகழ்வில் மூத்த அரசு அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் ஆன் மில்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

==========

Release ID: 1973347)

 

SMB/PLM/KRS



(Release ID: 1973462) Visitor Counter : 63