கலாசாரத்துறை அமைச்சகம்

என் மண் என் தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேசிய தலைநகர் தில்லியை அடைந்தனர்

Posted On: 29 OCT 2023 7:25PM by PIB Chennai

என் மண் என் தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்விற்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கடமைப் பாதை / விஜய் சவுக்கில் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் தேசிய தலைநகர் தில்லியை அடைகின்றனர். இந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் குர்கானில் உள்ள தஞ்சிரி முகாம் மற்றும் தில்லியில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் முகாம் ஆகிய இரண்டு முகாம்களில் தங்குகின்றனர்.

 

 

2023 அக்டோபர் 31, அன்று நடைபெறவிருக்கும் என் மண் என் தேசம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமிர்தக் கலச மண்ணுடன் தில்லி வந்தனர். இதேபோல் சத்தீஸ்கரில் இருந்தும் பிரதிநிதிகள் தில்லி வந்தடைந்தனர். கர்நாடகா மற்றும் கோவா மாநிலக் குழுக்கள் தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை வந்தடைந்தன. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா குழுவினரும் புது தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

 

 

நாளை, அதாவது அக்டோபர் 30 ஆம் தேதி, என் மண் என் தேசம் என்ற ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் சம்பிரதாய உடையில் அணிவகுத்துச் செல்வார்கள். கடமைப் பாதையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் மாநிலகள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் அமிர்தக் கலசத்திலிருந்து மண் / அரிசியை ஒரு பெரிய கலசத்தில் சேர்ப்பார்கள். தேசபக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் மாநில வாரியாக நடத்தப்பட உள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சி மாலை வரை நடைபெற உள்ளது.

 

 

பிரதமர் திரு நரேந்திர மோடி 31 அக்டோபர் 2023 அன்று விஜய் சௌக் / கடமைப் பாதையில் என் மண் என் தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வு என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிக்கிறதுஇதில் 766 மாவட்டங்களில் உள்ள 7000 க்கும் மேற்பட்ட வட்டாரங்களைச் சேர்ந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள். இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக 2021 மார்ச் 12 அன்று தொடங்கிய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் இரண்டு ஆண்டு கால இயக்கத்தின் நிறைவாகவும் இது அமையும். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

இந்த நிறைவு நிகழ்வில் தன்னாட்சி அமைப்பான எனது இளைய பாரதம் (எம்.ஒய் பாரத்) தொடங்கப்படவுள்ளது. இது இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசின் கவனத்தை செலுத்தவும், இளைஞர்களை வளர்ச்சியின் தீவிரப் பங்கேற்பாளர்களாக மாற்றவும் உதவும். இந்த தன்னாட்சி அமைப்பின் நோக்கம் இளைஞர்களை சமூக மாற்றத்துக்கான முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதாகும். இது அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக செயல்படும்.

 

அக்டோபர் 31-ம் தேதி ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் எனது இளைய பாரதம் (மேரா யுவ பாரத்) தொடர்பான இணையதளம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

AD/PLM/KRS

 

Release ID: 1972858



(Release ID: 1972872) Visitor Counter : 100