வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

'தாமிரத் தயாரிப்புகளுக்கான' தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) அறிவித்துள்ளது

Posted On: 23 OCT 2023 1:22PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்) மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தரக் கட்டுப்பாட்டு ஆணையை (கியூசிஓ) அறிவிப்பதற்கான முக்கிய தயாரிப்புகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), அடையாளம் கண்டு வருகிறது. இது 318 தயாரிப்புத் தரங்களை உள்ளடக்கிய 60-க்கும் அதிகமான புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது. இது தாமிரத் தயாரிப்புகளின் 9 தரங்களை உள்ளடக்கியது.

தாமிரம் மற்றும் அதன் உலோகக் கலவைகள் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், தொலைத்தொடர்பு, மின்சுற்றுகள் மற்றும் பல உபகரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தாமிரப் பொருட்கள் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும், அதன் தூய்மை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படக்கூடாது.

தரமான பொருட்களை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, "நமது மக்களின் திறன் மற்றும் நாட்டின் நம்பகத்தன்மையுடன், உயர் தரமான இந்தியத் தயாரிப்புகள் நீண்டகாலம் பயன்படும். இது உலகளாவிய செழிப்பிற்கு ஒரு வலிமையான தற்சார்பு இந்தியாவின் நெறிமுறைகளுக்கு ஓர் உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

எனவே, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், இந்தியாவுக்குள் தரமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுத்தல் ஆகியவை தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அறிவிப்பதன் நோக்கமாகும்.

இ-அரசிதழில் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடைந்தவுடன் இந்த ஆணைகள் நடைமுறைக்கு வரும். உள்நாட்டு சிறு/ குறுந்தொழில்களைப் பாதுகாக்கவும்தொழில் தொடங்குவதை எளிதாக்கவும் இது உதவும்.

இந்தியத் தர நிர்ணய சட்டத்தின் விதியை மீறினால் முதல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதம் குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாகவும் அல்லது பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரையும் விதிக்கப்படும்.

மேற்கூறிய முன்முயற்சிகளின் மூலம், இந்தியாவில் நல்ல தரமான உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் "தற்சார்பு இந்தியா" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுகிறது.

***

ANU/AD/SMB/AG/KPG



(Release ID: 1970118) Visitor Counter : 90