நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் போது நிலக்கரி அமைச்சகம் அதிகபட்ச சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திலிருந்து விடுவிப்பு
Posted On:
19 OCT 2023 4:32PM by PIB Chennai
நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதும், நாட்டின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதும் நிலக்கரி அமைச்சகத்தின் குறிக்கோள் ஆகும். அமைச்சகத்தின் முயற்சிகளின் பயனாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த நிலக்கரி நுகர்வில் இறக்குமதியின் பங்கு 26 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இந்தியா ஆண்டுதோறும் 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதிக்காக, இந்தியா ரூ.3.85 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. நிலக்கரி இருப்புகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனவே, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும்.
நாட்டின் நிலக்கரி வளம் மிக்க பகுதிகள், காடுகள் நிறைந்த புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. காடுகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இருப்பினும், பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டு, மென்மேலும் நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரத்தில், நிலக்கரி அமைச்சகம் காடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புடன் உள்ளது, எனவே, தேவைப்படும் குறைந்தபட்ச வனப் பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் இழந்த வனப்பரப்புக்கு இருமடங்கு ஈடுசெய்யப்படுகிறது.
எந்தவொரு நிலக்கரிச் சுரங்கத்தையும் இயக்குவதற்குத், தேவையான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவது கட்டாயமாகும். நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு பகுதி வன நிலத்தை உள்ளடக்கியதாக இருந்தால், செயல்பாட்டுக்கு முன் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட வேண்டும். எந்தவொரு ஒப்புதலும் வழங்கப்படுவதற்கு முன்பு கடுமையான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் உயர் அளவுகோல்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைகளைப் புறக்கணித்து எந்த நிலக்கரிச் சுரங்கமும் ஏலம் விடப்படவில்லை. எடுத்துக்காட்டாக, லெம்ரு யானைகள் வழித்தடத்தின் கீழ் வரும் நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற சத்தீஸ்கர் அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்களும் மேம்படுத்தப்படவில்லை. தனியார் நிலக்கரி சுரங்கங்களும் ஏல வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் அரசின் வேண்டுகோளின் பேரில், லெம்ரு யானை வழிப்பாதைக்கு அப்பால் உள்ள பகுதிகளும் விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரின் சுமார் 10% இருப்பு கொண்ட 40 க்கும் மேற்பட்ட புதிய நிலக்கரிச் சுரங்கங்களை விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் இந்த முடிவுகள் வனப் பகுதிகளை ஏலத்தில் விட வேண்டும் என்று தொழில்துறை கோரிக்கைகள் இருந்தபோதிலும் அவற்றைப் பாதுகாப்பதற்கான நமது பொறுப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.
*******
(Release ID:1969085)
ANU/PKV/IR/KPG/KRS
(Release ID: 1969131)
Visitor Counter : 152