பிரதமர் அலுவலகம்

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 14 OCT 2023 10:10PM by PIB Chennai

ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

சில நிமிடங்களுக்கு முன், அகமதாபாதில் உள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கில் இந்தியா ஓர்  அற்புதமான வெற்றியைப் பெற்றது. இந்த வரலாற்று வெற்றிக்காக இந்திய அணிக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவில் நமது கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக விளையாட்டு இருந்து வருகிறது. இந்தியாவின் கிராமங்களுக்குச் சென்றால், ஒவ்வொரு பண்டிகையும் விளையாட்டு இல்லாமல் முழுமையடையாது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்தியர்களாகிய நாம் விளையாட்டுப் பிரியர்கள் மட்டுமல்ல; விளையாட்டின் மூலம் வாழ்பவர்கள்.

நண்பர்களே

இந்தியாவில் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதன் காரணமாக, நாடு இன்று சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஒலிம்பிக்கில் பல இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு முன், நமது இளம் விளையாட்டு வீரர்கள், உலகப் பல்கலைக்கழக  விளையாட்டுகளில் புதிய சாதனை படைத்தனர்.

நண்பர்களே

சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான தனது திறனை இந்தியா நிரூபித்துள்ளது. உலகம் முழுவதும் 186 நாடுகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை சமீபத்தில் நடத்தினோம். 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை, ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை, மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகளையும் நடத்தினோம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. தற்போது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த உற்சாகமான சூழலில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.ஓ.சி நிர்வாகக் குழு முன்மொழிந்திருப்பதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த விஷயத்தில் விரைவில் சாதகமான செய்தி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா  தொடர்ந்து ஈடுபடும். இது 1.4 பில்லியன் இந்தியர்களின் பல தசாப்த கால கனவு மற்றும் விருப்பமாகும். உங்கள் அனைவரின் ஆதரவோடு அதனை நாங்கள் நனவாக்க விரும்புகின்றோம். 2036 ஒலிம்பிக்கிற்கு முன்பே, 2029 ஆம் ஆண்டில் இளைஞர் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. ஐ.ஓ.சி.யின் தொடர்ச்சியான ஆதரவை இந்தியா தொடர்ந்து பெறும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமல்லஇதயங்களை வெல்வதற்கான ஒரு வழியுமாகும். விளையாட்டு அனைவருக்கும் சொந்தமானது. இது சாம்பியன்களை உருவாக்குவது மட்டுமின்றி, அமைதி, முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. எனவே, உலகை இணைக்கும் மற்றொரு சக்திவாய்ந்த ஊடகம் விளையாட்டு.

பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டுமே. பிரதமர் திரு மோடி இந்தியில் உரை நிகழ்த்தினார்.

***

 

ANU/SMB/BS/AG/KPG



(Release ID: 1968386) Visitor Counter : 95