மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பருவநிலை மாற்றத்தை சர்வதேச மீன்வள நடவடிக்கைகளில் முக்கியமானதாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்த சர்வதேச மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் திரு எல். முருகன் தொடங்கி வைக்கின்றனர்
Posted On:
15 OCT 2023 6:00PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மாண்புமிகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 2023 அக்டோபர் 17 அன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெல்கம் ஹோட்டலில் "பருவநிலை மாற்றத்தை சர்வதேச மீன்வள நடவடிக்கைகளில் முக்கியமானதாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்" குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் கடல் மீன்களின் வளத்தை கணிசமாக மாற்றுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், பகிரப்பட்ட கடல் மீன் இருப்புகளில் கிட்டத்தட்ட பாதி மாறி இருக்கும் என்றும், உலகின் பெரும்பாலான பிரத்யேக பொருளாதார மண்டலங்கள் மாற்றத்தைக் காணும் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல் மீன் வள மாற்றம், தற்போதுள்ள மீன்வள மேலாண்மை கட்டமைப்பிற்கு ஒரு சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றம் மீன் இருப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதல் வலுவான சர்வதேச மீன்வள நிர்வாகத்திற்கு முக்கியமானது.
2022 செப்டம்பர் 5 முதல் 9 வரை ரோமில் நடைபெற்ற மீன்வளக் குழுவின் (சிஓஎஃப்ஐ 35) 35 வது அமர்வு, பிராந்திய மீன்வள அமைப்புகள் (ஆர்எஃப்பி) பருவநிலை மாற்றம் தொடர்பான அம்சங்களில் உறுப்பு நாடுகளுடன் திறம்பட செயல்பட வேண்டும் என்பதை அங்கீகரித்தது. பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய மீன்வள மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு ஐநா மீன்வள மற்றும் வேளாண் அமைப்பான எஃப்ஏஓ-விடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பருவநிலை மாற்றத்தை சர்வதேச மீன்வள நிர்வாகத்தில் பிரதானப்படுத்துதல் - இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிராந்திய மீன்வள அமைப்புகளின் நிலை" என்ற இந்த பிராந்திய பயிலரங்கை எஃப்ஏஓ நடத்துகிறது. இது பருவநிலை மீட்சித் தன்மையுடன் கூடிய மீன்வள மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கும், பருவநிலை மாற்றத்தை சர்வதேச மீன்வள நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பதற்கான உத்தியை வகுப்பதற்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பிராந்திய மீன்வள அமைப்புகளை (ஆர்.எஃப்.பி) உள்ளடக்கிய வகையில் செயலாற்றும். மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத்துறை இந்த சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.
எஃப்ஏஓ பயிலரங்குடன், கடல் மீன்வளத்தில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவின் தயார்நிலை குறித்த ஒரு சிந்தனை அமர்வும் 2023 அக்டோபர் 17 மற்றும் 18 தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள பிற முகமைகள் மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள் உலகளாவிய நிபுணர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.
மாண்புமிகு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா சர்வதேச மாநாட்டை தொடங்கி வைக்கிறார். கடல் மீன்வளத்தில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவின் தயார்நிலை குறித்த சிந்தனை அமர்வு, ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி, சமூக அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்களைக் காட்சிப்படுத்துவார்கள். மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சிறப்புரையாற்றுகிறார்.
எஃப்ஏஓ மூத்த அதிகாரிகள், பிராந்திய மீன்வள அமைப்புகள் (ஆர்.எஃப்.பி), மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், புவி அறிவியல் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மாநில அரசுகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்றவற்றின் பிரதிநிதிகள், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள், மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
அக்டோபர் 17, 2023 அன்று ஒரு இணை நிகழ்வாக "மீன்வள மேலாண்மையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் பற்றிய பயிலரங்கும் நடத்தப்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2021-ம் ஆண்டு ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டின்போது (யு.என்.எஃப்.சி சி.ஓ.பி 26) இந்த சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதில் நாடு முழுவதிலும் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது புதுமையான யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.
மாணவர்களிடையே நடத்தப்பட்ட நாடு தழுவிய போட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 யோசனைகளைக் கொண்ட விளக்க கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இரு அமைச்சர்களும் மீன்வள மேலாண்மையில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை முதன்மைப்படுத்துவது குறித்த அவர்களின் யோசனைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் திருமதி நீத்து குமாரி பிரசாத் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 1967929)
Visitor Counter : 195