மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, உலக விலங்குகள் தினம் 2023-ஐ கொண்டாடியது


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி ராமகிருஷ்ணனுக்கு விலங்குகள் நண்பர் விருது வழங்கப்பட்டது

Posted On: 04 OCT 2023 5:37PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பான இந்திய விலங்குகள் நல வாரியம் உலக  விலங்குகள் தினத்தை புதுதில்லியில் இன்று கொண்டாடியது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் பல்யான் ஆகியோர்  இதில் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா, இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் டாக்டர் ஓ.பி. சௌத்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ரூபாலா, நாட்டில் விலங்குகள் தொடர்பான பல பாரம்பரியங்கள் உள்ளன என்றும், அவை சமூகத்திற்கு மதிப்புமிக்கவை என்றும் கூறினார். விலங்குகள் மீதான மரியாதையையும், பற்றுதலையும் காட்டும் பாரம்பரிய நடைமுறைகளை வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நமது கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பசுவைக் குறிப்பிட்டு நாட்டுப் பசுவின் மதிப்பை திரு ரூபாலா வலியுறுத்தினார். மாட்டுச் சாணம் மற்றும் பஞ்சகவ்யத்தின் உபபொருட்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் விலங்குகள் நண்பர் மற்றும் ஜீவகாருண்ய விருதுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் பல்யான், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான சமநிலை மிகவும் முக்கியமானது என்றும், சமூகத்தில் இரண்டின் சகவாழ்வு குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார். சில அமைப்புகள் விலங்குகளுக்கு மிகவும் நல்ல பணிகளைச் செய்கின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பணிகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார். தெருநாய்களின் பிரச்சனை குறித்து பேசிய அமைச்சர், இது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்றும், இந்த விவகாரத்தை சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

விலங்குகள் நலத் துறையில் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்களின் அயராத முயற்சிகளை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த திரு ஜி.ராமகிருஷ்ணனுக்கு தனிநபருக்கான விலங்குகள் நண்பர் விருது வழங்கப்பட்டது.

 

***

ANU/AD/SMB/AG/KPG



(Release ID: 1964282) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi , Telugu